இலங்கை

கல்வி மறுசீரமைப்பை உடனடியாகக் கைவிடுங்கள்; ஹரிணியை நீக்குங்கள் அமைச்சரவையை மாற்றுங்கள்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிடுமாறும் அத்துடன், உடனடியாக அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பொருத்தமான ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறும் வலியுறுத்தி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரான எல்லே குணவன்ச தேரரினால் குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முறையான கொள்கைத் திட்டங்களை பின்பற்றி முன்னெடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பில் ஆசிரியர்கள், கல்வி நிபுணர்கள் மற்றும் மதத் தலைவர்களின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை என்றும், இதனால் இந்த கல்வித் திட்டம் வெளிப்படை தன்மையற்றது என்றும் எல்லே குணவன்ச தேரர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இவ்வாறான கல்வி மறுசீரமைப்பு சமூக விரோத செயற்பாடுகளுக்கு ஊக்குவிக்கலாம் என்பதுடன், மனநோயாளர்களால் நிறைந்த நாடாக மாறும் என்றும், இதனால் இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்றும், அவர் அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும், இதனால் உடனடியாக அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொண்டு கல்வி அமைச்சர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் எல்லே குணவன்ச தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பிக்கு என்ற ரீதியில் தனது வரலாற்று ரீதியான கடமையை நிறைவேற்றும் பொருட்டு, இந்த ஆபத்திலிருந்து நாடும் மக்களும் புத்த சாசனமும் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய, நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் எல்லே குணவங்ச தேரர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *