அரசாங்கத்தில் மாற்றம் புதிய பிரதமர் விஜித?; வெளிவிவகார அமைச்சராக ஹரிணி?

விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும், இதன்போது பிரதமர் பதவியிலும் மாற்றம் ஏற்படலாம் என்றும் கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைச்சரவை மறுசீரமைப்பின் போது ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு தற்போதைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மவ்ரட்ட’ என்ற சிங்கள் வார இறுதி பத்திரிகையொன்றிலேயே இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்வி மறுசீரமைப்பு மற்றும் 6ஆம் தர ஆங்கில பாடப்புத்தகத்தில் தவறான இணையத்தள முகவரி அச்சிடப்பட்டமை ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தரப்பினரால் கட்சி தலைமையகத்திற்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலும் ஏற்பட்டுள்ள நிலைமையை முகாமைத்துவம் செய்யும் வகையிலும் ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்த நீக்குவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கருத்தாடல்கள் உருவாகியுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதியினால் பெலவத்த அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதன்படி ஹரிணி அமரசூரியவை பதவியில் இருந்து நீக்கி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஜே.வி.பியினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அனால் இந்த நெருக்கடி நிலைமையில் பிமல் ரத்நாயக்கவுக்கு அந்தப் பதவை கொடுத்தால் நெருக்கடிகள் ஏற்படலாம் என்றும், இதனால் நடுநிலையான ஒருவருக்கே அதனை வழங்குவதே பொருத்தமாக இருக்குமென்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருக்கின்றது என்றும், இதன்படி தற்போதைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதற்கு பொருத்தமானவர் என்பதே ஜனாதிபதியின் கருத்தாக இருக்கின்றது என்றும், அவ்வாறு ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகணுவும் அறியக்கிடைக்கின்றது.
இதன்படி எதிர்வரும் நாட்களில் மீண்டுமொரு அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரியவருகின்றது.
![]()