முச்சந்தி

வெனிசுவேலா மீது அமெரிக்க தாக்குதல்: நாடு கடத்தப்பட்ட அதிபரும் மனைவியும்!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(உலகின் எந்த மூளையில் கனிம வளங்கள் இருந்தாலும் அங்கே அமெரிக்கா கால்வைத்து, அங்கே மனித உரிமை, ஜனநாயகம் என்று எதையாவது சொல்லி அந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது வரலாறாகும்)

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படை காரணம் ஆக்கிரமிப்பு நோக்கமே என்பது வெளிப்படை. உலகின் எந்த மூளையில் கனிம வளங்கள் இருந்தாலும் அங்கே அமெரிக்கா கால்வைத்து, அங்கே மனித உரிமை, ஜனநாயகம் என்று எதையாவது சொல்லி அந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது வரலாறாகும். இதனாலேயே தன் காலடியில் இருக்கும் வெனிசுவேலாவை நோக்கி அமெரிக்கா தற்போது சென்றுள்ளது.

வெனிசூவேலா தென் அமெரிக்காவில் உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் (Crude Oil) வளம் கொண்ட நாடு. சவூதி அரேபியா, ரஷ்யாவை விட அதிக எண்ணெய் அங்கேதான் இருக்கிறது. அதுவும் செறிவு வாய்ந்த கச்சாய் எண்ணெய் என்பது அதன்
சிறப்பம்சம் அமெரிக்காவிற்கு அதிக தேவை கொண்டதாகும்.

அமெரிக்கா குண்டுவீச்சு:

கடந்த சில மாதங்களாக வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில், வெனிசுவேலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல்வேறு கப்பல்களை அமெரிக்கா தாக்கியுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம் என சூளுரைத்தார்.

வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸ் கடந்த சனிக்கிழமை அதிகாலை ஏழு இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. தாக்குதல் காரணமாக வெனிசுவேலா ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெனிசுவேலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெனிசுவேலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெனிசுவேலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறி வெனிசுவேலாவில் இராணுவ வசதிகள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. வெனிசுவேலா அரசாங்கம் தற்போது தேசிய அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

இராணுவ ஆக்கிரமிப்பு தொடருமா?

ஜனவரி 3, 2026 சனிக்கிழமை கராகஸில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, வெனிசுவேலாவின் மிகப்பெரிய இராணுவ வளாகமான ஃபுர்டே டியுனாவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. அத்துடன் கராகஸில் விமான நிலையத்தில் பாரிய குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன.

கரீபியன் கடலில் கடற்படை பணிக்குழுவை அனுப்பியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெனிசுவேலா மீது தரைவழித் தாக்குதல்கள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை எழுப்பியதன் பின்னர் இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

வெனிசுவேலா தலைநகர் கராகஸ் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இராணுவ நிலைகள் உட்பட பல இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பே இந்தத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தி வெனிசுவேலா அரசாங்கம் பல மாநிலங்களில் பொதுமக்கள் மற்றும் இராணுவ நிறுவல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. இது இராணுவ ஆக்கிரமிப்பு என்றும் விவரித்து உள்ளது.

சனிக்கிழமை அதிகாலை கராகஸில் பலத்த குண்டு வெடிப்புகள் மற்றும் தாழப் பறக்கும் விமானங்கள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபுயர்ட் டியூனா (Fuerte Tiuna) இராணுவத் தளம் மற்றும் லா கார்லோட்டா (La Carlota) விமானத் தளம் உட்பட முக்கிய இராணுவ நிலைகளில் புகைமண்டலம் காணப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கராகஸிலும், மிராண்டா, அரகுவா மற்றும் லா குய்ரா மாநிலங்களிலும் தாக்குதல்கள் நடந்ததாக அரசாங்கம் கூறியுள்ளது.வெனிசுவேலாவின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றும் முயற்சியில் வாஷிங்டன் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் வெனிசுவேலா அரசு குற்றம் சாட்டியுள்ளது. அத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது என்று சபதம் செய்துடன், அந்த நாட்டு அரசு
அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த இராணுவ ஆக்கிரமிப்பை வெனிசுவேலா அரசு கடுமையாக நிராகரித்துள்ளதுடன் கண்டித்துள்ளது. அமெரிக்கா, வெனிசுவேலாவின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

போதைப்பொருள் இலக்குகள்

அமெரிக்கா, வெனிசுவேலாவுக்கு எதிராக பல மாதங்களாக தொடர்ந்து இராணுவ அழுத்தம் கொடுத்து வந்தது. மேலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள், மதுரோ அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. வெனிசுவேலாவில் சமீபத்திய வாரங்களில் பதற்றம் அதிகரித்து வந்தது.

இந்த வார தொடக்கத்தில், வெனிசுவேலா பிரதேசத்தில் நடந்த முதல் தாக்குதலாக, போதைப்பொருள் படகுகள் நிறுத்தும் பகுதியில் தாக்குதல் நடத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி போதைப்பொருள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய வெனிசுவேலா உட்பட இலத்தீன் அமெரிக்க பிராந்தியம் மீது தரைவழித் தாக்குதல் நடத்துவதாக பலமுறை அச்சுறுத்தியுள்ளார். ஆனால் அமெரிக்காவை சீர்குலைக்கும் வகையில் வெனிசுவேலாவின் மதுரோ ஒரு கடத்தல் அமைப்பை வழிநடத்துகிறார் என்று அவர் ஆதாரங்களை வழங்காமல் கூறியுள்ளார்.

டெல்டா படையின் அதிரடி தாக்குதல்:

டெல்டா படையால் (Delta force) சனிக்கிழமை இரவு மின்னல் வேகப் படை நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கண்கள் மறைக்கப்பட்டு கைவிலங்குடன் தோன்றும் படம் ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டு வந்த இந்த படை நடவடிக்கை, வெனிசுவேலா அரசாங்கத்தினுள் ஊடுருவியிருந்த சிஐஏ (CIA) உளவாளிகளே ஜனாதிபதி மதுரோவின் இருப்பிடத்தைக் கண்காணிப்பதற்கு உதவினர் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுவேலா மீதான தாக்குதலுக்கு 150 க்கு மேற்பட்ட அமெரிக்கப் போர் விமானங்கள் பங்குவகித்துள்ளன.

அமெரிக்க வீரர்கள் மதுரோவின் வதிவிடத்துக்குள் உள்ளூர் நேரப்படி அதிகாலை இரண்டு மணியளவில் நுழைந்தனர் எனக் கூறப்படுகிறது. அந்த வேளை வானில் பறந்துகொண்டிருந்த
அமெரிக்கப் போர் விமானங்களால் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஸ் ரீல்த் ஹெலிக்கொப்ரர்கள் மூலம் (stealth helicopters) அங்கு குதித்த கொமாண்டோக்கள் வீட்டைச் சுற்றிவளைத்துக் கொண்டனர்.

மதுரோவை அமெரிக்க இராணுவத்தின்உயர் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவாகிய டெல்டா படையே (Delta force) கைப்பற்றியது. ஒரு கோட்டை போன்ற பெரிய வீடு ஒன்றில் இருந்த சமயமே இருவரையும் கைது செய்துள்ளனர். அங்கு ஒரு பலத்த பாதுகாப்புக் கவச அறை இருந்துள்ளது. அதற்குள் சென்று ஒளிந்து கொள்ள முயன்ற போதும் அது முடியாமற் போனது. அந்த அறையின் இரும்புக் கதவை உடைத்துத் திறப்பதற்கு அமெரிக்கப் படைகள் தயாராக இருந்தன. ஒரு வேளை அவர் தப்பிச் செல்ல முயன்றிருந்தால் நிச்சயம் கொல்லப்பட்டிருப்பார்.

மதுரோவும் மனைவியும் சம்பவ இடத்திலேயே படையினரிடம் சரணடைந்தனர் என்று கூறப்படுகிறது. பின்னர் இருவரும் ஹெலிக்கொப்ரர் மூலம் ஈவோ ஜீமா்(Iwo Jima) என்ற அமெரிக்கப் போர்க் கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்தக் கப்பல் நியூயோர்க் நோக்கிப் பயணிக்கிறது. இந்த படை நடவடிக்கையை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இதுபோன்ற காட்சி எதையும் நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. அதை நேரலையில் பார்த்து தாக்குதலின் ஒவ்வொரு அம்சத்தையும் அவதானிக்க முடிந்தது. அதை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் போலவே பார்த்தேன் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

சர்வதேச கண்டனம்:

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவின் வெனிசுவேலாவின் இறையாண்மையை கேள்விக் குறியாக்கும் விடயம் மட்டும் அல்ல சர்வ தேச சட்டத்திற்கு முரணானது என தனது கண்டத்தை பதிவு செய்துள்ளார். பல்வேறு இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் இந்த தாக்குதலை கண்டித்து வருகின்றனர்.

குறிப்பாக ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் மீண்டும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், தனது கண்டனத்தை ஈரான் அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பலவும் இச் செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்தும் வந்தாலும், மேற்குலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *