இலங்கை

அரசு வீழ்ச்சியடையும் அபாயம் தென்படுகிறது; முன்னாள் அமைச்சர் ஹரீன்

முதல் நான்கு மாதங்களில் பொருளாதாரம் தொடர்பில் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காவிட்டால் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கான அபாயம் காணப்படுகின்றது என்று முன்னாள் அமைச்சரான ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு விசாரணையொன்றுக்காக நேற்று வியாழக்கிழமை சென்றிருந்த போது, அங்கு வெளியில் இருந்த ஊடகவியலாளர்களுக்கு தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது ஹரீன் பெர்ணான்டோ மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நெருக்கடி நிலைமையொன்று ஏற்பட்டது. இப்போது நாடு மீண்டு வந்துகொண்டிருக்கின்றது. சுற்றுலாத்துறையிலும் முன்னேற்றம் உள்ளது. நிலைமைகளை பார்க்கும் போது நாடு நல்ல நிலைக்கு செல்ல முடியும். அரசாங்கம் பொய்யான விடயங்களை செய்யாமல், எதிர்க்கட்சிகளை விமர்சித்துக்கொண்டிராமல் அரசாங்கத்தின் பணிகளை சரியாக செய்து சென்றால் நல்லது என்று நான் நினைக்கின்றேன். முதல்தடவையாக அரசாங்கத்தை ஏற்றுள்ளதால் இவர்களுக்கு அனுபவம் போதவில்லை என்று நினைக்கின்றோம். இந்த வருடத்திலாவது அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது செயற்குழுவில் முன்வைப்பார். இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியுடன் பணியாற்றுவது தொடர்பில் தீர்மானம் எடுப்போம். ஐக்கிய தேசியக் கட்சி சகல எதிர்க்கட்சிகளுடனும் தொடர்புகளை பேணுகின்றது. எதிர்க்கட்சிகளுடன் அரசாங்கத்திற்கு எதிரான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு சவாலொன்று உள்ளது. முதல் நான்கு மாதங்களில் நிலைமையை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு வராவிட்டால், பொருளாதார தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் வீழ்ச்சியடைவதற்கான அபாயம் உள்ளதாகவே குறிப்பிட வேண்டும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *