இலங்கை

நாட்டை மீட்க ஜனாதிபதி இதுவரை என்ன செய்தார்?; சர்வதேச உதவியைக் கோர அரசு ஏன் பின்னடிக்கிறது?; *பேரிடர் பாதிப்பிலிருந்து மீள ஒரு வீத உதவி கூட இதுவரை கிடைக்கவில்லை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுவரை 8 நாடுகளுக்கு பயணம் செய்துள்ள போதும் அவரின் இந்த பயணங்களின் மூலம் நாட்டுக்கு ஒரு ரூபாவாவது கொண்டு வர முடிந்ததா? மாறாக இந்தியாவுடன் திருட்டுத்தனமாக ஒப்பந்தம் செய்து, நாட்டை இந்தியாவுக்கு காட்டிக்கொடுத்தத்தை தவிர வேறு எதனையும் இவர்கள் செய்யவில்லை. எனவே நாட்டை நிர்வகிக்க முடியாத நிலையிலுள்ள அரசாங்கம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யுமான தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் நாட்டுக்கு 186,000 கோடி ரூபா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது இந்த இயற்கைப் பேரழிவு நடந்த நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்ல அரசாங்கம் 8000 கோடி ரூபாவை ஒதுக்கியது. அத்துடன் ”மீளக்கட்டியெழுப்படும் இலங்கை”நிதியத்துக்கு இதுவரை 400 கோடியே 20 இலட்சம் ரூபா சேர்ந்திருக்கிறது. இதற்கு மேலதிகமாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து எங்களுக்கு 11 மில்லியன் டொலர் கிடைத்துள்ளது .

இவ்வாறு கிடைத்த மொத்த பணத்துடன் எமக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு தொகையுடன் ஒப்பிட்டு பார்க்க்கும்போது , இதுவரை எமக்கு மொத்தமாக நூற்றுக்கு ஒரு வீதம் கூட கிடைக்கவில்லை. அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் எமக்கு 206 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது . இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கும்போது, அரசாங்கம் இதுவரை சேர்த்துக்கொண்டிருப்பது 64500 கோடி ரூபா மட்டுமே . ஆனால் எமக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு மதிப்பீடு 186,000 கோடி ரூபா. அதன் பிரகாரம் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொகையை ஈடு செய்வதற்கு இன்னும் 121,500 கோடி ரூபா தேவை . அதனால் இந்த தொகையை எவ்வாறு ஈடு செய்யப் போகின்றோம் என்பதனை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

இந்தியா எமக்கு 450 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. அதற்காக நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம். அதில் 350 மில்லியன் டொலர் கடன் அடிப்படையிலும் 100 மில்லியன் டொலர் நிவாரண அடிப்படையிலும் வழங்கி இருக்கிறது. இவை தவிர, ஜனாதிபதி வெளிநாட்டு தலைவர்கள் எத்தனை பேருடன் தொடர்புகொண்டு நிதி நன்கொடைகளை கேட்டிருக்கிறார் எனக் கேட்கிறோம்?.சர்வதேச நன்காெடையாளர் மாநாடு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் பல தடவைகள் தெரிவித்திருக்கிறார். ஆனால் அரசாங்கம் அதுதொடர்பில் இது வரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து, எமது நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இயற்கைப்பேரழிவு தொடர்பில் அறிவுறுத்த ஊடக சந்திப்பொன்றை நடத்தி இருக்கிறதா?அதுவும் இல்லை. அதாவது அரச நிர்வாகம் தொடர்பில் இந்த அரசாங்கத்துக்கு சிறிதளவேனும் அறிவில்லை. கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் கோத்தாபய ராஜபக்ச கூட , தனிப்பட்ட முறையில் பல வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பல நாடுகளுடன் கலந்துரையாடி நன்கொடைகளை பெற்றுக்கொண்டார்.

ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலையில், நாட்டை மீட்பதற்கு சர்வதேச தலைவர்கள் யாருடனாவது கதைத்து, நிவாரணங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறாரா? அவர் ஜனாதிபதியான பின்னர் இதுவரை 8 நாடுகளுக்கு சென்றுவந்தார். அவரின் இந்த பயணங்களின் மூலம் நாட்டுக்கு ஒரு ரூபாவாவது கொண்டு வர முடிந்ததா?

. மாறாக இந்தியாவுடன் திருட்டுத்தனமாக ஒப்பந்தம் செய்து, நாட்டை இந்தியாவுக்கு காட்டிக்கொடுத்தத்தை தவிர வேறு எதனையும் இவர்கள் செய்யவில்லை. தற்போதைய நிலையில் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதால், தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நாட்டு மக்களுக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *