தமிழ் இலக்கண, இலக்கியத்தில் ‘நடையியல்’ (Stylistics /Diction)… சின்னத்தம்பி குருபரன்

தமிழில் கவிதை இலக்கியம் எப்போது தோன்றியது என்பதற்கு ஆதாரமோ கால வரையறையோ இதுவரை கிடைக்கப் பெறவில்லை. பொ.ஆ.மு நான்காம் நூற்றாண்டில் எமக்குக் கிடைத்த தொல்காப்பியம் இலக்கண நூலை ஆதாரமாகக் கொண்டு தமிழ் இலக்கிய வரலாறு பொ.ஆ.மு நான்காம் நூற்றாண்டுக்கு மந்தையது எனக் கணிப்பிடுகின்றோம். தொல்காப்பியர் எவ்விதப் பின்னணியும் இன்றி தொல்காப்பிய நூலைச் செய்யவில்லை. மாறாக, தமிழின் தொன்மையான இலக்கண மரபையும் (அகத்தியம் போன்ற முந்துநூல்கள்), அக்காலத்தைய இலக்கணக் கோட்பாடுகளையும் ஒப்பிட்டு, தமிழின் தனித்துவத்தைப் போற்றி முறைப்படுத்தியுள்ளார் என்பதே வரலாற்று உண்மை. தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் எழுதிய சிறப்புப் பாயிரத்தில் உள்ள பின்வரும் வரிகள் இதற்கு மிகச்சிறந்த சான்றாகும்.
“செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோன்…”
என்பது தொல்காப்பியர், தொல்காப்பியத்தை இயற்றுவதற்குத் தமக்கு முற்பட்ட இலக்கண நூல்களைக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் இந்நூலை உருவாக்கினார் என்பதற்குத் தொல்காப்பியப் பாயிரமே கூறும் சான்றாகும். பாயிரம் குறிப்பிடும் ‘முந்துநூல்’ என்பது அகத்திய முனிவர் இயற்றிய ‘அகத்தியம்’ என்னும் இலக்கண நூல் என்று மரபுவழிக் கருத்துகள் தெரிவிக்கின்றன. தொல்காப்பியர் அகத்தியரின் மாணாக்கர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அகத்தியம் என்ற இலக்கண நூல் இதுவரை நமக்குக கிடக்காமையினால் அது பேசு பொருளாக மாத்திரமே இருக்கின்றன.
நூற்பாக்களில் தொல்காப்பியர் பயன்படுத்தும் கீழ்வரும் தொடர்கள், சொற்கள் அவருக்கு முன்னரே இலக்கண மரபு இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக ‘என்மனார் புலவர்’, ‘என்ப’, ‘தொன்மொழிப் புலவர்’ ‘யாப்பறி புலவர்’ ‘எனவாங்கு’ எனவரும் பாக்களின் இறுதி அடிகள், சொற்கள் ஆகியன இதற்கு வலுச் சேர்க்கின்றன. இந்தத் தொடர்கள் மூலம், தாம் கூறும் இலக்கண விதிகள் புதியன அல்ல, ஏற்கனவே புலவர்களால் கூறப்பட்டு வந்த மரபுகள் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அகத்தியம் இலக்கண நூல் ஆரிய, பிராமண, திராவிடக் கூட்டினால் திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டது என்ற வாதமும் எள்ளது. கவிதை இலக்கியத்தில் இருந்துதான் இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும். அந்தக் கவிதைத் தொகுப்புக்கள் எதுவும் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை. தொல்காப்பியத்துடன் பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டிலும் அதற்குப் பிற்பட்ட காலத்துக்குரியதுமான தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களே கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
தமிழ் இலக்கண வரலாறு என்பது ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையும், தொடர்ச்சியான வளர்ச்சியும் கொண்டது. காலந்தோறும் தமிழ் மொழி அடைந்த மாற்றங்களையும், பிற மொழிகளின் தாக்கங்களையும் உள்வாங்கி, நடையியல் கூறும் தமிழ் இலக்கண நூல்கள் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதை வரலாற்று ரீதியாக ஐந்து முக்கிய காலகட்டங்களாகப் பிரித்து நோக்கலாம்.
1. சங்க காலமும் அதற்கு முற்பட்ட காலமும். (பொ.ஆ.மு 4-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.பி 5-ஆம் நூற்றாண்டு வரை). இக்காலத்தில் தமிழின் மிகப் பழமையான, இன்று வரை நமக்குக் முழுமையாகக் கிடைத்துள்ள உலக மொழிகளுக்கு முதன் முதல் தோற்றிய இலக்கண நூலான ‘தொல்காப்பியம்’ எமக்குக் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னரே அகத்தியம் போன்ற நூல்கள் இருந்ததாகக் கூறப்பட்டாலும், அவற்றுக்கு முறையான நூற்பா ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களை உள்ளடக்கியது. “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்… எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி” எனப் பனம்பாரனாரின் தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. அக்காலத்தில் தமிழ் மொழிக்கு மட்டுமன்றி, தமிழர்களின் வாழ்வியல் நெறிகளுக்கும் (அகப்பொருள், புறப்பொருள்) இலக்கணம் வகுத்த தனித்துவம் தொல்காப்பியத்திற்கு உண்டு.
2. பக்தி இலக்கிய காப்பிய காலம். (பொ.ஆபி 6 முதல் 10-ஆம் நூற்றாண்டு வரை). சங்க காலத்திற்குப் பின்னர் தமிழ் மொழியில் வடமொழிச் சொற்களின் கலப்பும், பக்தி இலக்கியங்களின் பெருக்கமும் காரணமாகப் புதிய இலக்கண நூல்களின் தேவை உருவானது. இக்காலகட்டத்தில் ‘ஐந்திலக்கணம்’ (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) என்னும் கட்டமைப்பு வலுப்பெற்றது. யாப்பிலக்கணம் செய்யுள் வடிவங்களை ஆராய ‘யாப்பருங்கலம்’, ‘யாப்பருங்கலக் காரிகை’ (அமிர்தசாகரர்) ஆகிய நூல்கள் தோன்றின. ‘அணியிலக்கணம்’ வடமொழியில் தொகுக்கப்பட்ட ‘காவ்யாதர்சம்’ என்ற நூலைத் தழுவித் ‘தண்டியலங்காரம்’ (தண்டி) இயற்றப்பட்டது. ‘பொருளிலக்கணம்’ கூற ‘இறையனார் அகப்பொருள்’, ‘நம்பி அகப்பொருள்’ என்பவற்றுடன் புறப்பொருள் பற்றி விளக்க ‘புறப்பொருள் வெண்பாமாலை’ (அயனாரிதனார்) ஆகியவை தோன்றின.
3. சோழர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை (காப்பிய காலமும் அடங்கும்). (பொ.ஆ.பி 11 முதல் 17 ஆம் நு’ற்றாண்டு வரை) நூற்றாண்டு வரை) இக்காலம் தமிழ் இலக்கண வரலாற்றின் பொற்காலம் எனலாம். தொல்காப்பியத்தின் எழுத்து, சொல் அதிகாரங்களுக்கு மேலும் விளக்கமளிக்க இலக்கணங்களை எழுதியதோடு எளிய வடிவில், அக்கால மாற்றங்களுக்கு ஏற்ப, புதிய இலக்கண நூல் இக்காலத்தில்தான் எழுதப்பட்டன. ‘நன்னூல்’ (பொ.ஆ.பி 13-ஆம் நூற்றாண்டு, பவணந்தி முனிவர்) சீயகங்கன் என்ற சிற்றரசனின் வேண்டுகோளுக்கு இணங்க நன்னூல் இயற்றப்பட்டதாக அதன் பாயிரம் கூறுகிறது. இன்று வரை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் அடிப்படைத் தமிழ் இலக்கணம் கற்க நன்னூலே முதன்மை நூலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றைவிட *‘வீரசோழியம்’ (புத்தமித்திரர்) வடமொழி இலக்கண அமைப்பைத் தமிழில் புகுத்த முயன்ற ஐந்திலக்கண நூலாகும். ‘பிரயோக விவேகம் / இலக்கணக் கொத்து’ எனும் நூல் தமிழும் சமஸ்கிருதமும் ஒரே வேரைக் கொண்டவை என்ற நோக்கில் எழுதப்பட்டது. இது தூய தமிழ் இலக்கணத்துக்கு இழுக்கை ஏற்படுத்திய நூலாகும்.
4. உரை ஆசிரியர்களின் காலமும் ஐரோப்பியர் வருகையும். (பொ.ஆ.பி. 17 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை). இக்காலத்தில் புதிய இலக்கண நூல்கள் தோன்றியது ஒருபுறமிருக்க, பழைய நூல்களுக்கு நுட்பமான, வரலாற்றுப் பின்புலத்துடன் கூடிய ‘உரைகள்’ எழுதப்பட்ட காலம் இதுவாகும். இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் போன்றோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். இதற்கிடையில், ஐரோப்பிய பாதிரிமார்களின் வருகையால் தமிழ் இலக்கணம் உலகளாவிய பொது வடிவம் பெறத் தொடங்கியது. ‘தொன்னூல் விளக்கம்’ என்ற நூலை வீரமாமுனிவர் தமிழ் மொழிக்கான ஐந்திலக்கணத்தையும் ஐரோப்பியர் கற்கும் வகையில் எளிமையாக எழுதினார். ‘கொடுந்தமிழ் இலக்கணம்’ என்ற நூலைப் பேச்சுத் தமிழுக்கான இலக்கணத்தை விளக்க முதன் முதலில் வீரமாமுனிவர் லத்தீன் மொழியில் எழுதினார். வைத்தியநாத தேசிகர் ‘இலக்கண விளக்கம்’ என்ற நூலை எமுதினார். இது ‘குட்டித் தொல்காப்பியம்’ என அழைக்கப்படுகிறது. ஆறுமுக நாவலரின் ‘தமிழ் இலக்கணச் சுருக்கம்’ மிகத் தெளிவான இலக்கண நூலாகக் கொள்ளப்பட்டது.
5. தற்காலம் (20-ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை). இந்நூற்றாண்டில் அச்சு ஊடகங்களின் வளர்ச்சி, உரைநடைப் பெருக்கம், திராவிட இயக்கங்களின் தமிழ் மீட்சிப் பணிகள், தூயதமிழ் இயக்கங்களின் தோற்றம் காரணமாக இலக்கணம் மேலும் எளிமையாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் ‘சுவாமிநாதம்’ (சுவாமிநாத உபாத்தியாயர்), பாரதியாரின் இலக்கணக் கட்டுரைகள் (உரைநடைக்கான புதிய சிந்தனைகள்), ‘புதிய தமிழ் இலக்கணம்’ (டாக்டர் பொன்.கோதண்டராமன் (பொற்கோ) – தற்காலத் தமிழின் அமைப்பை விளக்கும் மொழியியல் நோக்குடைய நூலாகக் கொள்ளப்பட்டது. பின்னர் கணினி மற்றும் இணையப் பயன்பாடு (Natural Language Processing – NLP) காரணமாக, தமிழ் இலக்கணம் மொழியியல் (Linguistics), கணினி மொழியியல் நோக்கில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. எழுத்துப்பிழை திருத்திகள் (Spell checkers) மற்றும் சந்திப்பிழை திருத்திகளுக்கான விதிகள் நன்னூல், தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன.

தமிழ் இலக்கண நூல்களின் இந்த வரலாற்றுத் தொடர்ச்சி, தமிழ் ஒரு ‘உயர்தனிச் செம்மொழி’ என்பதுடன், கால மாற்றங்களை உள்வாங்கித் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலும் கொண்டது என்பதற்கும் மிகச்சிறந்த சான்றாகும். இத்தகைய பெருமையும் சிறப்பும் கொண்ட தமிழ் இலக்கணத்தில் ‘நடையியல்’ என்பது ஒரு படைப்பின் கட்டமைப்பு, சொற்களின் தேர்வு, ஓசை நயம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒன்றாகக் காட்டப்பட்டிருக்கிறது.
தமிழ் இலக்கண, இலக்கியச் சூழலில் நடை (Stylistics / Poetics of Style) என்பது, ஒரு படைப்பாளி தன் கருத்தை வெளிப்படுத்தக் கையாளும் தனித்துவமான மொழிப் பயன்பாட்டையும், எழுத்து வடிவத்தையும் குறிக்கும். எளிமையாகச் சொன்னால், “என்ன சொல்கிறோம்” என்பது இலக்கியப்பொருள் என்றால், அதை “எப்படிச் சொல்கிறோம்” என்று விளக்குவதுதான் நடையியல் ஆகும். ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கெனத் தனித்துலமா ஒரு நடையைப் பின்பற்றுவார். அது அவருக்கே உரித்தானதாக இருக்கும். ஒருவரின் நடத்தையிலும், செயற்பாட்டிலும் அவருக்கேயுரிய பாணியை அவதானிக்கலாம். நடையை பாணி, தனித்துவம், இயல்பு என்ற பொருள் படவும் கூறலாம். ஓர் எழுத்தாளன் தனது கவிதை, புனைகதைகள் (நாவல், சிறுகதை), கட்டுரை, திரைக்கதை, வசனம், நாடகத் தயாரிப்பு அகியவற்றிலும் தனக்குரிய ஒரு பாணியைப் பின்பற்றுவார்.
ஒவ்வொருவருடைய நடிப்பிலும் தனித்துவம் காணப்படும். அதேபொல் ஒவ்வொரு கவிஞனும் தனது தனித்துவமான ஆற்றலால் வித்தியாசம் வித்தியாசமான நடையில் கவிதைகளைப் புனைகின்றனர். கவிதைகளில் கையாளப்பட்டுவரும் நடைகைளைத் தொல்காப்பியம் முதல் பிற்காலக் கவிதை இலக்கண நூல்கள் வரை தமிழ் நடையைப் பற்றியும், அவை கவிதைகளில் கையாளப்பட்ட விதம் பற்றியும் சுருக்கமாக நோக்கப்படுகின்றன.
1. தமிழ் இலக்கண நூல்கள் கூறும் அடிப்படையான தமிழ் நடைகள். செய்யுளியலில், “நடைபெற்று இயலும் நடையினான” என்றும், “நடை எனப்படுவது பாட்டினது நடையே” என நடை பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் செய்யுளியலில் கவிதையின் நடையைத் தீர்மானிக்கும் முக்கியக் கூறுகளைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
அ) ஒலி நடை (Phonological Style) ஒலி நடை செய்யுளில் ஓசை நயம் எவ்வாறு அமைகிறது என்பதைக் குறிக்கும். மெய் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஓசை நடையை ஆதாரமாகக் கொண்டவை. இதில் முதலாவது, வல்லின எழுத்துக்கள் (க், ச், ட், த், ப், ற்) மிகுந்து வரும் வன்பாட்டை (வல்லோசை நடை). இது வீரம், சினம் போன்ற போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும். இரண்டாவது, மெல்லின எழுத்துக்கள் (ங், ஞ், ண், ந், ம், ன்) மிகுந்து வரும் மென்மையான மென்பாட்டை (மெல்லோசை நடை). இது காதல், அவலம் (துக்கம்), அமைதி போன்ற உணச்சிகளை வெளிப்படுத்த உகந்தது. மூன்றாவது இடையின எழுத்துக்கள் (ய், ர், ல், வ், ழ், ள்) கலந்து வரும் சமநிலையான இடைப்பாட்டை (இடையோசை நடை) நடை. இவற்றோடு செய்யுளின் ஓசையை அடிப்படையாகக் கொண்ட நான்கு முக்கிய நடைகள் பற்றியும் கூறுகின்றன. அவை,
1. செப்பலோசை நடை (வெண்பா): இருவர் உரையாடுவது போன்ற தெளிவான, உறுதியான நடை இதுவாகும். இதனைத் திருக்குறள், கம்பராமாயணம், நளவெண்பா ஆகியவற்றில் தெளிவாகக் காணலாம்.
2. அகவலோசை நடை (ஆசிரியப்பா): ஒருவர் மேடையில் உரையாற்றுவது அல்லது கதையைக் கூறுவது போன்ற ஓட்டமுடைய நடை. சங்க இலக்கியங்கள் பலவும் இந்த நடையிலேயே அமைந்துள்ளன.
3. துள்ளலோசை நடை (கலிப்பா): கன்றுக்குட்டி துள்ளி ஓடுவது போன்று சீர்தோறும் தாழ்ந்து உயரும் துள்ளலான இசையைக் கொண்ட நடை.
4. தூங்கலோசை நடை (வஞ்சிப்பா) பாவின் சீர்தோறும் துள்ளாது, மெல்லத் தூங்கி அசைந்து வரும் சீரான மந்த ஓசை நடை. மற்றும்,
ஆ). சொல் நடை (Lexical Style): ஒரு பாடலில் பயின்று வரும் சொற்களின் தன்மை. இயற்சொல் (இயல்பான சொல்), திரிசொல் (இலக்கியச் சொல்), திசைச்சொல், வடசொல் ஆகியவற்றில் எவற்றை ஆசிரியர் அதிகமாகப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து நடை மாறுபடும்.
இ). தொடரமைப்பு நடை (Syntactic Style):* சொற்களைத் தொடராக அமைக்கும் முறை. எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகியவற்றை மாற்றியமைப்பதன் மூலம் (பொருள்கோள் முறைகள்) கவிஞர்கள் தனித்துவமான நடையை உருவாக்குவர்.
2. கவிதைகளில் இந்நடையின் பாயன்பாடு. தமிழ் புலவர்கள் இந்த நடைகளை வெறும் விதிகளாகப் பார்க்காமல், கவிதையின் பொருளுக்கும் உணர்ச்சிக்கும் (Mood and Emotion) ஏற்ப மிக நுட்பமாகக் கையாண்டுள்ளனர்.
அ) உணர்ச்சியை வெளிப்படுத்தக் (Tone & Emotion) கவிதையின் கருப்பொருளுக்கு ஏற்ப ஓசையை மாற்றுவதில் தமிழ் புலவர்கள் வல்லவர்கள். சங்க இலக்கியங்களில் ஆசிரிய நடையை அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் இயற்கை வர்ணனைகள், போர்ச் செய்திகளை வெளிப்படுத்த இயல்பான பேச்சு நடைக்கு நெருக்கமான அகவல் நடையைக் கையாண்டிருக்கின்றனர்.
பக்தி இலக்கியங்களில் சந்த நடையைத் திருப்புகழ் போன்ற நூல்களில் அருணகிரிநாதர் வல்லின, மெல்லின எழுத்துக்களை மாற்றி மாற்றிப் போட்டு, தாளக் கட்டுடன் கூடிய சந்த நடையை உருவாக்கிப் பாடியுள்ளார். ‘முத்தைத்தரு பத்தித் திருநகை…’ எனற பாடல் முழுவதும் இவ்வாறே அமைந்திருக்கின்றன. அதேபோல், கம்பராமாயணத்தில் போர் நடக்கும் போது சொற்கள் விறுவிறுப்பாக, கடினமான ஒலிகளோடு ஒலிப்பதைக் காணலாம்.
ஆ) மக்களிடத்தில் அறக்கருத்துக்களை ஆழமாகப் பதிக்க (Didactic Style). மக்களுக்கு அறிவுரை கூறும் போது அல்லது தத்துவங்களைச் சொல்லும் போது சிதறாத, தெளிவான நடை தேவைப்பட்டது. அதற்குப் புலவர்கள் வெண்பா நடையைத் தேர்ந்தெடுத்தனர். ஈரடிகளில் சொல்ல வந்த கருத்தை நறுக்கென்று கூறும் குறள் நடை, பிற்காலத்தில் நாலடியார் போன்ற நூல்களிலும் தொடர்ந்தது.
இ) காப்பியங்களில் கதை சொல்லும் நடை (Narrative Style). சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் கதையைத் தொடர்ந்து கூற வேண்டும் என்பதால், கேட்போருக்குச் சலிப்புத் தட்டாத ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ நடையைக் கையாண்டன. அதில் கவிதைக்கு இடையே உரைநடையும் கலந்து வரும்.
3. பிற்கால மாற்று நடைகள் (Modern Evolutions). காலப்போக்கில், மரபுக்கவிதையின் கடுமையான யாப்பு விதிகளிலிருந்து விடுபட்டு, நவீன கவிதைகளில் நடையின் போக்கை மாற்றி அமைத்துப் பாடினர். பாரதியாரின் பாட்டு நடை சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில், ‘பாமர மக்கள் நடை’யைக் கவிதைக்குள் கொண்டு வந்தார் “தேடிச் சோறுநிதந் தின்று…”) என்ற பாடல் சிறந்த எடுத்துக்காட்டு. புதுக்கவிதை நடையில் (Free Verse) ஓசை, தாளம் போன்ற கட்டுப்பாடுகள் இன்றி, சொல்ல வரும் கருத்தின் ஆழத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் உரைவீச்சு நடை கையாளப்படுகின்றன.
தமிழ் இலக்கணம் காட்டும் நடைகள் என்பவை வெறும் எழுத்துக்களின் சேர்க்கை அல்லாமல் அவை கவிஞனின் உள்ளத்து உணர்வுகளை வாசகனின் மனதில் கடத்தும் மிகச் சிறந்த ஊடகமாகத் தமிழ் கவிதைகளில் தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ் மொழியின் செய்யுளின் நடை செய்யுளின் வடிவம், ஓசை நயம், சொற்களின் தெரிவு, அணிகலன்கள் மற்றும் கவிதை வெளிப்பாட்டு முறை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவை ஒவ்வொன்றும் தமிழ் இலக்கணத்தில் நடையியல் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள அதிகாரங்கள், இயல்கள்/படலங்கள் மற்றும் முக்கிய நூற்பாக்கள் (செய்யுள்கள்) பற்றி விளக்கிய பல இலக்கண நூல்கள் காணப்பட்டாலும் இக்கட்டுரையில் நான்கு நூல்கள் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன.
1. தொல்காப்பியம். தமிழ் நடையியலின் ஆதிமூலம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் செய்யுளின் வடிவ அழகையும், ஓசை அமைப்பையும், உள்ளடக்க உத்திகளையும் மிக விரிவாக விளக்கியுள்ளார். பொருளதிகாரத்தில் செய்யுளியல் மற்றும் உவமையியல், எச்சவியல் ஆகியவற்றில் செய்யுளின் நடை பற்றி விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. தொல்காப்பியர் செய்யுளியலில் செய்யுளுக்குரிய 34 உறுப்புகளைக் குறிப்பிடுகிறார். அதில் மாத்திரை, அசை, சீர், தளை, அடி, யாப்பு ஆகிய வடிவ நடையையும், தூக்கு (ஓசை/ஈற்று வடிவம்), தொடை (சொல்-பொருள் நயம்), வண்ணம் (ஓசை நடை) ஆகியன இசையியல் நடையையும் தீர்மானிக்கின்றன எனக் குறிப்பிட்டார். முக்கிமாக, செய்யுள் 391 இல் (செய்யுள் உறுப்புகள்)
“மாத்திரை யெழுத்திய லசைவகை யெனவே… வண்ணந் தானு மிருபஃ தென்ப” எனத் தொடங்கும் செய்யுளில், மாத்திரை தொடங்கி வண்ணம் ஈறாக 26 உறுப்புகளையும், அம்மை, அழகு முதலான 8 வனப்புகளையும் சேர்த்து 34 உறுப்புகளைத் தொல்காப்பியர் வரையறுக்கிறார்.
‘வண்ணம்’ (Rhythm/Tone) என்பது நடையியலில் மிக முக்கியமானது. தொல்காப்பியர் பாட்டிற்குரிய ஓசை நடையை 20 வண்ணங்களாகப் (எதிர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம் என) பகுத்துக் கூறுகின்றார்.
செய்யுளின் வனப்பில் (Aesthetics) ஒட்டுமொத்த அழகியல் நடையாகிய அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என 8 வனப்புகளை வகைப்படுத்திக் கூறுகின்றார் 539-548 வரையான நூற்பாக்களில் விருந்து பற்றிக் குறிப்பிடுகின்றார். ‘விருந்து’ என்பது கவிதையைப் புதிய நடையில் பாடுவதைக் குறிக்கும்.
2. நன்னூல்
பவணந்தி முனிவரின் நன்னூல் முதன்மையாக எழுத்து, சொல் ஆகியவற்றுக்கு இலக்கணம் கூறினாலும், செய்யுள் எழுதும் ஆக்கமுறை மற்றும் உத்திகள் (Style of Composition) பற்றியும் கூறுகிறது. நன்னூலின் பொதுப்பாயிரப் பகுதியில் நூல் இயல்பு, நடை, உத்தி பற்றி விரிவாக விளக்குகிறது.
ஒரு செய்யுள் நடை அல்லது நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு 10 அழகுகளையும், எவை அமையக் கூடாது என்பதற்குப் 10 குற்றங்களையும் நன்னூல் வரையறுக்கிறது. சொல்லதிகாரம் – செய்யுள் ஆக்க நடைப் பகுதியில் வரும்,
“பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிடனாக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்” (நன்னூல்: 268)
எழுவகைத் தாதுக்களால் உயிர் வாழும் உடம்பு அமைவது போல, பல்வேறு சொற்களைக் கொண்டு, பொருள் விளங்குமாறு, அறிவில் வல்ல புலவர்கள் அழகியல் (அணி) நயம் பெறச் செய்வதே ‘செய்யுள்’ என நடையியல் வரையறையை நன்னூல் தருகிறது.
நன்னூலின் பொதுப்பாயிரத்தில் கூறப்படும் 32 உத்திகள் (Devices) (தந்திர உத்திகள் – நூற்பா 15) ஒரு நூலை அல்லது கவிதையை எவ்விதம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நடையியல் நெறியை விளக்குகின்றன.
3. வீரசோழியம். புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம், தமிழ் மரபோடு வடமொழி (சமஸ்கிருதம்) நடையியல் மற்றும் காவியக் கொள்கைகளையும் இணைத்து எழுதப்பட்ட ஐந்திலக்கண நூலாகும். அலங்காரப் படலம் மற்றும் யாப்புப் படலம் ஆகியவற்றில் நடையியல் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. சமஸ்கிருத தண்டியலங்காரத்தின் மூல நூலான ‘காவியாதர்சம்’ என்ற நூலைத் தழுவி, செய்யுளின் ‘நெறி’ (மார்க்கம்) மற்றும் ‘குணங்கள்’ பற்றிப் பேசுகிறது. செய்யுள் நடையை வைதருப்ப நடை (Vaidarbha Style), கௌட நடை (Gauda Style) என இருவகை நெறிகளாகப் பிரித்து, செய்யுளின் ஓசை மற்றும் சொல் அமைப்பைக் குறிப்பிடுகிறது. வீரசோழியம் காவிய நடையின் 10 பண்புகளாகச் (குணங்களாகச்) சமஸ்கிருத மரபையொட்டிப் பின்வருவனவற்றைக் கூறுகிறது. அவற்றுள் சிலேடை (சொற் செறிவு), சமநிலை, மென்மை, தெளிவு, காந்தி (ஒளி/அழகு), ஒளதார்யம் (உன்னதம்) போன்ற குணங்கள் நல்ல கவிதை நடைக்கு அவசியம் என்கிறது.
4. யாப்பருங்கல காரிகை. அமிழ்தசாகரர் இயற்றிய இந்நூல், முழுக்க முழுக்கச் செய்யுளின் வடிவ நடை (Metrical Style) மற்றும் யாப்பியல் கட்டமைப்பை மட்டுமே ஆராயும் தனித்துவமான நூலாகும். இந்நூலின் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் செய்யளின் நடையியல் பற்றி விரிவாக விளக்குகின்றன. முக்கியமாகக் கவிதையின் ஓசை நயத்தையும் (Rhyme and Meter) நடையையும் தீர்மானிக்கும் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றைக் காரிகை வடிவில் (கட்டளைக் கலித்துறை யாப்பில்) விளக்குகிறது. உறுப்பியலில் தொடை நடை என்ற நூற்பாவில்,
“எழுத்தே அசையே சீரே தளையே அடியே தொடேயே…” எனத் தொடங்கி, செய்யுளின் ஓசை நடையைத் தீர்மானிக்கும் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை போன்ற தொடைகளின் வகைகளை மிக விரிவாக விளக்குகிறது.
ஓசை நடையில் (Acoustic Style) பாக்களுக்குரிய ஓசைகளான செப்பலோசை (வெண்பா – கம்பீர நடை), அகவலோசை (ஆசிரியப்பா – உரையாடல் நடை), துள்ளலோசை (கலிப்பா), தூங்கலோசை (வஞ்சிப்பா) ஆகியவற்றின் மூலம் கவிதையின் உணர்வுக்கு ஏற்ற ஓசை நடையை (Sound Styling) இந்நூல் முறைப்படுத்துகிறது.
இலக்கியப் படைப்பாளிகள் தங்கள் கருத்தை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் “மொழி நடை” (Stylistics) எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இந்த நான்கு நூல்களும் கால வாரியாக (பழங்காலம் முதல் இடைக்காலம் வரை) மிகச்சிறந்த வழிகாட்டல்களாகத் திகழ்கின்றன.
தற்காலத்தில் உரைநடையின் (Prose) வளர்ச்சி காரணமாக மேடைப் பேச்சு நடை, இதழியல் நடை, அறிவியல் நடை, புனைகதை நடை, புதுக்கவிதை நடை, கட்டுரை நடை, நாடக நடை எனப் பல கிளைகளாகப் பிரிந்துள்ளது. அதேபொல் ஆற்றொழுக்கு நடை, சரளநடை, இயல்பு நடை போன்ற நடைகளும் உரைநடைகளில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு படைப்பாளியின் மனநிலை, அவர் வாழும் காலம், அவருடைய சமூகப் பின்னணி ஆகியவற்றை அவருடைய ‘நடை’யைக் கொண்டே அறிஞர்கள் துல்லியமாக மதிப்பிடுகின்றனர். இதனால்தான் இலக்கியங்களில் பயிலப்பட்டுவரும் “நடையை மனிதனின் வெளிப்பாடு” (Style is the man) என்று கூறுவார்கள். சங்க இலக்கியம் முதல் தற்கால நவீன இலக்கியம்வரை ஒவ்வொரு படைப்பாளியும் தமக்குப் பிடித்தமான நடைகளைப் பின்பற்றி படைப்புக்களை உருவாக்கி வருகின்றனர். பொ.ஆ.பி 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எற்பட்ட அறிவியல் மறுமலர்ச்சி பாரம்பரிய மரபு இலக்கியத்துறையில் கட்டுடைப்புக்களைச் செய்து நவீன இலக்கியத்தை ஆக்கித் தந்தன. வள்ளுவர், இளங்கோ, கம்பர் போன்றோர் இத்தகைய கட்டுடைப்புக்களைச் செய்தாலும் மகாகவி பாரதியாரில் இருந்தே நவீன தமிழ் இலக்கியம் தோற்றம் பெற்றது. நடை, வடிவம், உருவம், உள்ளடகம், உத்தி, படிமம், குறியீடு என்பவற்றில் புதுப்புது உத்திகளைப் புகுத்தி காலத்துக்கு ஏற்ற கவிதைகள், புனைகதைகளைப் புனைய ஆரம்பித்தவிட்டனர். அதுவே தற்கால வழக்காகவும் மாறிக் கொண்டிருக்கிறது.
அறிவியல் மறுமலர்ச்சி காரணமாகப் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் தமிழ் இலக்கியப் போக்கில் ஏற்பட்ட நவீனத்துவம் தமிழ் இலக்கியப் பரப்பில் புத்துயிர்ப்பை ஏற்படுத்தின். மரபுக்கு எதிரான மாற்றுச் சிந்தனைகளும் மாக்சீசப் பார்வையும் அச்சியந்திரத்தின் வருகையும் கிறிஸ்தவப் பாதிரிமாரின் செயற்பாடுகளும் நவீன தமிழ் இலக்கியம் தோற்றம்பெறக் காரணமாக அமைந்தது. இம்மாற்றம் இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தே தோற்றம்பெற ஆரம்பித்தன. நவீனத்துவம், முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு, பின்நவீனத்துவம் என இலக்கியப் போக்கில் மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தன. அதனால் கவிதை, புனைகதை இலக்கியங்களின் நடையிலும் புதுமை தென்பட ஆரம்பித்தன. இதனைப் பல புதுக்கவிதைகளிலும் வசன கவிதைகளிலும் பெருவாரியாக அவதானிக்கலாம்.
![]()