சட்டவிரோதமாகவே திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்பட்டது தையிட்டி விகாரைக் காணி பொது மக்களுடையது!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, பொதுமக்களுக்கு சொந்தமானது, சட்டவிரோதமாகவே விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது என , நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதலகல பத்ம தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் காணொலி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போது தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியானது காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சொந்தமானதாகும்.
போர் காலத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை கைப்பற்றி, அனுமதியின்றி அங்கு சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட இடமே இந்த திஸ்ஸ விகாரை எனப்படும் ‘போலி திஸ்ஸ விகாரை’யாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையை, இங்கு யுத்த காலத்திலிருந்து மிக நீண்டகாலமாக வாழும் நாக விகாரையின் விகாராதிபதியான எனக்கு மட்டுமே தெரியும். ஆகவே எமது நாட்டில் உள்ள மக்கள் இது தொடர்பில் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனவே, இந்த விடயத்தில் யாரும் கலவரமடைய வேண்டாம். இந்தத் தமிழ் மக்களை இதுவரை அமைதியாகவே நான் பார்த்திருக்கிறேன்.
இந்த நிலையில் வடக்கு பிராந்தியத்திற்கான பிரதான சங்கநாயக்க தேரருக்கான பதவியை, போலியாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். பௌத்த தர்மத்திற்கு மாறாக அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
நான் 53 வருடங்களாக இங்குள்ள தமிழ் மக்களுடனேயே நயினாதீவிலேயே தங்கியுள்ளேன். மிகவும் சமாதானமாகவும் அன்பாகவும் தமிழ் சகோதரர்களுடன் நாங்கள் ஒன்றாக வாழ்கின்றோம்.
எனினும், தற்போது தையிட்டி பகுதிக்குத் தேரர் ஒருவர் வருகைதந்து, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி, விகாரைக்கான புதிய கட்டடங்களை நிர்மாணித்து வருகின்றார். இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.
எனவே இலங்கைவாழ் அனைத்து மக்களும் எவ்வித சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொள்ளாது, சிந்தித்து செயற்பட வேண்டும்.
அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கை எடுப்பது சிறந்தது என்பது எனது கருத்தாகும்.
இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற வகையில் கருத்துக்களைப் பகிர வேண்டாம் என நாட்டில் ஏனைய தேரர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடித் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். அல்லாவிடின், இந்த விடயம் பெரும் பூதாகரமாகும்.
இதன்போது தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்படும் என்பதைக் கூறிக் கொள்கிறேன், என அவர் அந்த காணொலியில் தெரிவித்துள்ளார்.
![]()