யெமனில் 3000 கைதிகள் பரிமாற்றத்திற்கு ஹவுதிகளுடன் ஒப்பந்தம் கைச்சார்த்து

யெமன் உள்நாட்டுப் போரின் போது பிடிக்கப்பட்ட சுமார் மூவாயிரம் கைதிகளை விடுவிக்க யெமன் அரசாங்கமும், ஹவுதி கிளர்ச்சிக்குழுவும் இணக்கம் கண்டுள்ளன.
ஓமானில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதோடு கைதிகள் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தமும் கைச்சார்த்திடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, யெமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கமும் ஹவுதி குழுவும் கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. இரு தரப்பு அதிகாரிகளும் ஆயிரக்கணக்கானவர்கள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளனர்.
யெமனுக்கான ஐ.நா. தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையொன்றில், 2014 இல் யெமன் அரசாங்கத்திற்கும் ஹவுதிகளுக்கும் இடையிலான மோதல் ஆரம்பித்தது. அந்த மோதலை சமரசமாகத் தீர்த்து வைப்பதற்கான மத்தியஸ்தராக ஓமான் செயற்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒமானின் தலைநகர் மஸ்கட்டில் சுமார் இரு வார கால பேச்சுவார்த்தைகளுக்குப் பின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மஸ்கட்டில் உள்ள ஹவுதி தூதுக்குழுவின் பிரதிநிதி அப்துல் காதர் அல்-மோர்தாடா எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள அறிக்கையில், ‘இந்த ஒப்பந்தத்தின் கீழ் எங்களது 1,700 கைதிகளுக்கு ஈடாக 07 சவுதிகள், 23 சூடானியர்கள் உட்பட 1,200 கைதிகள் பரிமாறிக் கொள்ளப்படுவர்’ என்றுளார்.
தென்மேற்கு ஆசிய நாடான யெமனில், சவுதி அரேபிய ஆதரவிலான கூட்டணி அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி குழுவினருக்கும் இடையில் உள்நாட்டு போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
![]()