இலங்கை

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இந்தியாவை கோரிய தமிழ்த் தலைமைகள்

மாகாணசபைத் தேர்தல்களை விரைந்து நடத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வடக்கு, கிழக்கின் தமிழ்த் தலைவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த பேரனர்த்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளில் தமிழ்த் தலைவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதும், மாகாணசபைகள் இயங்கியிருந்தால் இந்த நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டிக்கும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிடம் தமிழ்த் தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடாமல் விரைந்து நடத்த அரசுக்கு அழுத்தம் வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். நிவாரண செயற்பாடுகளில் பொதுத்தேர்தல் மூலம் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களும், தமது கட்சிகள் ஆட்சியமைத்துள்ள உள்ளுராட்சி மன்றங்களும் முழுமையாக புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்  கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்றக்குழுத் தலைவர் சி.சிறிதரன், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்; ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிலிருந்து தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பங்கேற்றனர். அத்துடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சந்திப்பின் தொடக்கத்தில், ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஜெய்சங்கர் கேட்டறிந்தார். மன்னார் மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிந்திருப்பதாகவும், திருகோணமலையில் இதே போன்று பாதிப்புகள் பதிவாகியிருப்பதாகவும் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். நிவாரண வழங்கலில் தங்கள் பங்களிப்பு இல்லையென்றும் மாகாணசபைகள் இயங்கியிருந்தால் அவற்றின் ஊடாக நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும், ஆனால் தற்போது ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மாகாணசபைத் தேர்தல்களை கடந்த வருடம் நடத்துவதாக அரசு வாக்குறுதி அளித்திருந்த போதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், பழைய முறைமையில் நடத்தும் தனிநபர் பிரேரணை சாணக்கியன் எம்.பியால் கொண்டுவரப்பட்டது குறித்தும் அவர்கள் விபரித்தனர். இந்தியாவால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை பாதுகாக்க இந்தியா கடமைப்பட்டிருப்பதாக வலியுறுத்திய தமிழ்த் தலைவர்கள் விரைந்து தேர்தல்களை நடத்த அரசுக்கு அழுத்தம் வழங்குமாறு கேட்டனர்.

அதேவேளை, புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கான அர்த்தமுள்ள சமஷ்டி தீர்வையும், உச்சபட்ச அதிகார பகிர்வையும் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி ஆகியவை தொடர்பிலும் விவாதிக்கப்பட்டு, அவற்றின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படுமென ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார். இச்சந்திப்பின் முடிவில், மாகாணசபைத் தேர்தல்கள் இன்னும் நடைபெறாத சூழ்நிலையில் அவற்றை விரைந்து நடத்த அரசுக்கு வழங்கவேண்டிய அழுத்தம் முக்கியமானது எனக் கருத்து தெரிவித்த தமிழ்த் தலைவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தை ஜெய்சங்கரிடம் சமர்ப்பித்தனர்.

பொதுவாகவே இலங்கைக்கு வரும் அரசியல் தலைவர்களை சந்தித்து கதைப்பதோடு தமது கடமை முடிந்து விட்டதாக எண்ணும் வடக்கு மற்றும் கிழக்கின் தமிழ் அரசியல் தலைவர்களின் வழக்கமான சந்திப்பு என்றளவில் இதுவும் முடிந்துவிடக்கூடாதென்பதே அனேக தமிழர்களின் அவாவாக உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *