ஐரோப்பிய ஒன்றியத்திடம் மோப்ப நாய்களைக் கோரும் இலங்கை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண் சரிவுகளில் உயிருடன் புதையுண்டவர்களின் உடல்களைக் கண்டுபிடிப்பதில் உதவுவதற்காக, ஒரு தொகுதி மோப்ப நாய்களை அனுப்புமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பேரிடர்களுக்குப் பிறகு காணாமல் போனவர்களைக் கருத்தில் கொண்டு, அரசாங்க அதிகாரிகள் இன்னும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டித்வா சூறாவளி நவம்பர் 28 அன்று மலையகத்தில் பாரிய மண் சரிவை ஏற்படுத்தியதுடன்,- சில நேரங்களில் 500 மிமீ வரை என்ற அளவில் எதிர்பாராதளவுக்கு மழை வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது
இதனால் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் மேலும் பலர், முக்கியமாக மத்திய மலைப்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், மண் சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக காணாமல் போயினர்.
மண் சரிவுக்குப் பின்னர் இறந்ததாகக் கருதப்படுபவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக பேரிடர் முகாமைத்துவ நிலைய அதிகாரி ஒருவர் டெய்லி மிரரிடம் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் மோப்ப நாய்களைக் கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பேரிடர்களுக்குப் பிறகு மனித உடல்களைக் கண்டுபிடிக்க தங்கள் வலுவான மண நுகர்வைப் பயன்படுத்தும் சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் உள்ளன.
ஆழத்தில் சிக்கியுள்ள உடல்களைக் கண்டுபிடிப்பது சவாலானது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை குறித்து கேட்டபோது, அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
![]()