இலங்கை

பல மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை; மலையகத்தில் இன்னமும் பேராபத்து நீங்கவில்லை!; தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்

டித்வா புயலுடன் உருவான மழையுடன் கூடிய காலநிலை குறைவடைந்தாலும் மலையகத்தில் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாய நிலைமை இன்னும் அகலவில்லை.அந்தப் பிரதேசங்களில் தொடர்ந்தும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயங்கள் நிலவுதாக தேசிய கட்டிய ஆராய்ச்சி நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்கனவே மண்சரிவு இடம்பெற்ற பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் தேசிய கட்டிய ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு முன்னெச்சரிக்கை நீடித்தல் அறிவிப்புக்கமைய கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பல பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயத்திற்கான மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கண்டி மாவட்டத்தில் ஏற்கனவே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றும் மண்சரிவு அபாயங்கள் ஏற்படலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ள பன்வில, தொலுவாவ, குண்டசாலை, மினிப்பே, தெல்தொட்ட, உடுநுவர, பகததும்பர, அக்குரண, உடுதும்பர, யட்டிநுவர, அரிஸ்பத்துவ, உடபலாத உள்ளிட்ட பல பிரதேசங்களில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல, வரகாபொல, கேகாலை, புலத்கொகுபிட்டி, அரநாயக்க, ரம்புக்கனை, கல்கமுவ மற்றும் கலிகமுவ உள்ளிட்ட பிரதேசங்களுக்கான சிவப்பு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று குருநாகல் மாவட்டத்தில் பொல்காவெல, நாரம்மல, மாவத்தகம, அலவ்வ மற்றும் ரிதிகம ஆகிய பிரதேசங்களிலும் மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல்ல, லக்கல பல்லேகம, ரத்தோட்டை, யடவத்த, மாத்தளை, வில்கமுவ, நாவுல மற்றும் பல்லேபொல ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் மற்றும் கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கண்டி, கேகாலை, பதுளை, மாத்தளை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவுகளில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 350க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் மண்சரிவு இடம்பெற்றுள்ள பகுதிகளில் மேலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயங்கள் நிலவுவதாகவும், இதனால் அந்தப் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மாவட்டங்களில் மண்சரிவுகளால் வீடுகளை இழந்தவர்கள் மாத்திரமன்றி மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் பிரதேச பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் மற்றும் பொதுக் கட்டிடங்களிலும் தங்கியிருக்கின்றன. இந்நிலையில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளுக்கு செல்வது ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட வீதிகளில் பயணிப்பவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டித்வா புயலுடன் உருவான மழையுடனான காலநிலை குறைவடைந்த போதும், வட, கிழக்கு பருவகாலம் ஆரம்பமாகுவதால் குறிப்பிட்ட பிரதேசங்களில் மீண்டும் தொடர் மழை பெய்யுமாக இருந்தால் மண்சரிவு அபாய நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *