கொழும்பு, கம்பஹாவில் வெள்ள ஆபத்து தணிந்தது; இயல்பு நிலைமை திரும்புகிறது

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்த வெள்ள நிலைமை தணிந்து நீர் வழிந்தோடி வருவதுடன், வெள்ளத்தால் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி கடுவலை, ஹங்வெல்ல, களனி, வத்தளை, களனிமுல்லை , சேதவத்த , வெல்லம்பிட்டி , ஒருகொடவத்த , அங்கொட , வத்தளை , மட்டக்குளி மற்றும் பாலத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
சில பிரதேசங்களில் தாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கியிருக்கும் நிலையில், அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் தவிர ஏனைய பிரதேச மக்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை காலை முதல் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதேவேளை பல பிரதேசங்களில் வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக முழ்கியிருந்தமையினால் மக்களின் சொத்துக்களுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. வீடுகளுக்கு திரும்பியுள்ள மக்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
கடந்த வார இறுதியில் மலைநாட்டில் பெய்த கடும் மழையுடன்கூடிய காலநிலையால் களனி ஆற்றின் நீர்மட்டம் படிப்படியாக உயர்வடைந்து தாழ்நில பிரதேசங்களில் கடும் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. இதன்போது கொழும்பில் பெருவெள்ளம் ஏற்படுவது தொடர்பில் வெள்ளிக்கிழமை மாலை முதல் அறிவிக்கப்பட்டதுடன் வெள்ளிக்கிழமை இரவு முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் குறித்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இந்த வெள்ளத்தின் போது சில பிரதேசங்களில் 10அடிக்கும் மேல் வெள்ளம் காணப்பட்டதுடன், பல நூற்றுக் கணக்கான வீடுகளும் வெள்ளத்தில் முழுமையாக மூடப்பட்டிருந்தன.
இதேவேளை கொழும்பு அவிசாவளை வீதியும் வெள்ளம்பிட்டிய பகுதியுடன் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த வீதியுடனான போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நீர் குறைவடைந்து வருவதால் அந்த வீதியூடான வாகன போக்குவரத்தக்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் கொழும்பு மாவட்டத்தில் 76,839 குடும்பங்களை சேர்ந்த 294,675 பேர் பாதிக்கப்பட்டிருந்ததுடன், இவர்களில் 5561 குடும்பங்களை சேர்ந்த 20,293 பேர் 107 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()