இலங்கை

கொழும்பு, கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில்; 200,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு 

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்தமையினால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 200,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக மலைநாட்டில் பெய்த கடும் மழையுடன்கூடிய காலநிலையால் களனி ஆற்றின் நீர்மட்டம் படிப்படியாக உயர்வடைந்து தாழ்நில பிரதேசங்களில் கடும் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் கடுவலை, ஹங்வெல்ல, களனிமுல்லை , சேதவத்த , வெல்லம்பிட்டி , ஒருகொடவத்த , அங்கொட , வத்தளை , மட்டக்குளி மற்றும் பாலத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டள்ளது. அந்த பகுதிகளில் பல இடங்கள் 10 அடிக்கும் மேல் வெள்ள நீரால் மூழ்கியிருக்கின்றன.

ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை இரவு முதல் எட்டியாந்தோட்டை, ருவான்வெல்ல, தெஹியோவிற்ற மற்றம் அவிசாவளை ஆகிய பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்ததுடன், அதன்பின்னர் படிப்படியாக ஹங்வெல்ல முதல் கொழும்பு வரையில் வெள்ள நிலைமை ஏற்பட்டது.

கொழும்பில் பெருவெள்ளம் ஏற்படுவது தொடர்பில் வெள்ளிக்கிழமை மாலை முதல் அறிவிக்கப்பட்டதுடன், களனி ஆற்றுக்கு அருகில் வசிப்பவர்களை உடனடியாக வீடுகளை விட்ட வெளியெறுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மாடி வீடுகளில் இருந்த பலர் வீடுகளில் இருந்த நிலையில், குறித்த பிரதேசங்களில் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டு வீடுகளில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அம்பத்தலே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள களனி ஆற்றின் வெள்ள அணைக்கட்டை தாண்டியம் நீர் வேகமாக பரவியதால் நேற்று குறிப்பிட்ட பிரதேசங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்த பிரதேசங்களில் பல வீடுகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை கொழும்பு அவிசாவளை வீதியும் வெள்ளம்பிட்டிய பகுதியுடன் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த வீதியுடனான போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளது. வீதியில் வெள்ளம் உள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக படகு சேவைகள் நடத்தப்படுகின்றன.

இந்த வெள்ளத்தில் அதிகளவில் கொலன்னாவ பிரதேசத்தில் வசிப்பவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரதேசத்தில் 42 கிராமசேவகர் பிரிவுகளில் 27704 குடும்பங்களை சேர்ந்த 121,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 97 இடங்களில் பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *