பலதும் பத்தும்

முக்கிய கனிமங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்

இங்கிலாந்தின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள கார்ன்வால் மாவட்டத்தில் இருக்கும் டங்ஸ்டன் மற்றும் லித்தியம் சுரங்கங்களின் உற்பத்தியை அதிகரிக்க 50 மில்லியன் பவுண் நிதியுடன் முக்கிய கனிம முயற்சி திட்டத்தை பிரிட்டன் முன்னெடுக்க உள்ளது. இதற்கான மூலோபாயத் திட்டத்தை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆரம்பித்துள்ளார்.

கார் கதவுகள் முதல் குளிர்சாதன பெட்டிகள் வரை அனைத்திற்கும் அவசியமான முக்கிய காந்தங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு அவசியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் வகைகளின் நிமித்தம் இந்த மூலோபாயத்திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது முக்கிய கனிய வளங்களையும் அரிய மண் வகைகளையும் கொண்டு உற்பத்தி செய்யப்படும் காந்தங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் விநியோகத்தில் சீனா பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. அத்தகைய பொருட்களுக்கு சீனாவில் தங்கியிருப்பதை தவிர்க்கும் வகையிலேயே பிரித்தானியா இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர், நீண்ட காலமாக, பிரிட்டன் ஒரு சில வெளிநாட்டு விநியோகஸ்தர்களில் சார்ந்து இருப்பதால் எமது பொருளாதாரமும் தேசிய பாதுகாப்பும் உலகளாவிய தாக்கங்களுக்கு ஆளாகிறது. அதனைத் தவிர்க்கும் வகையில் கார்ன்வாலில் உள்ள டங்ஸ்டன் மற்றும் லித்தியம் சுரங்கங்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான கனிமங்கள் நவீன வாழ்க்கையினதும் நமது தேசிய பாதுகாப்பினதும் முதுகெலும்பு என்று குறிப்பிட்ட அவர், உள்நாட்டு உற்பத்தி மற்றும் மீள்சுழற்சியை அதிகரிப்பது பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆதரிக்கவும் உதவும் என்றும் கூறியுள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய லித்தியம் படிவு கார்ன்வாலில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button