கட்டுரைகள்

சொல்லித்தான் ஆகவேண்டும்!… அரசியல் பத்தித்தொடர்… 42 … தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

கிழக்குத் தமிழர்களுக்குத் தனித்துவ அரசியல் கட்டமைக்கப்படுதல் அவசியம்.

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சமூக – பொருளாதார – அரசியல் இருப்பு என்பது இலங்கையின் வடமாகாணத்தின் ஆனையிறவுக்கு அப்பால் யாழ்குடா நாட்டிற்குள் அடங்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் இருப்பாக மட்டுமே ஆகமாட்டாது. அது ஆனையிறவுக்கு இப்பால் கிளிநொச்சி உட்பட்ட வன்னிப் பிரதேசத்தையும் கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கிய விவசாய மனோபாவம் கொண்ட மக்களுடைய இருப்புமாகும்.

ஆனால், இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றில் சேர். பொன்னம்பலம்/அருணாசலம் காலத்திலும் சரி-1944 இல் இருந்து 1949 வரையிலான ஜிஜி பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் காலத்திலும் சரி-1949 இலிருந்து இலங்கையின் குடியரசு அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்பெற்ற 1972 வரையில் எஸ் ஜே வி செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி காலத்திலும் சரி-1972 இலிருந்து 1976 ஆம்ITAK's General Secretary nominated for National List seat ஆண்டின் தனிநாட்டுத் தீர்மானம் வரையிலான தமிழர் கூட்டணி/தமிழர் விடுதலைக் கூட்டணி காலத்திலும் சரி-1977 இல் இருந்து 1983 இனக் கலவரம் (கறுப்பு ஜூலை) வரையிலான எதிர்க்கட்சித் தலைவர்/தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் தரப்பு அரசியலுக்கு தலைமையேற்றிருந்த காலத்திலும் சரி – 1983 இலிருந்து கூர்மையடைந்து 2009 வரை நடைபெற்ற ஆயுதப் போராட்ட காலத்திலும் சரி – 2009 இல் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுபெற்றதலிருந்து இதுவரையிலான சமகாலத்திலும் சரி தமிழர்களுடைய அதிகாரவர்க்கத் தமிழர் அரசியல் தரப்பினால் எடுக்கப்பெற்ற தீர்மானங்களும் மேற்கொள்ளப்பெற்ற செயற்பாடுகளும் யாழ் குடாநாட்டுக் குட்டி முதலாளித்துவ வர்க்க நலனைப் பேணும் யாழ் மையவாத அரசியலாகவும்/யாழ்குடா நாட்டுக் குட்டி முதலாளித்துவ வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காக அதற்கு வெளியேயுள்ள விவசாய மனோபாவம் கொண்ட விளிம்புநிலை மக்களின் நலன்களைப் பலிகொடுக்கும் வர்க்கக் குணம்சத்தையே-போக்கையே கொண்டிருப்பதாகவுமே இன்றுவரை அதில் மாற்றம் ஏற்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எது எப்படியிருப்பினும் வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் ஒரு பொதுவான அரசியல் சமன்பாடு பொருந்தமாட்டாது. இதனால்தான் பூர்வீகம் வடமாகாணத்தை-யாழ்ப்பாணத்தைக் கொண்டிருந்த கிழக்குத் தமிழ் அரசியல்வாதிகளான நல்லையா மாஸ்டர்-கே டபிள்யு தேவநாயகம்-ராஜன் செல்வநாயகம்-பொத்துவில் கனகரெட்ணம் ஆகியோர் தமிழரசுக் கட்சியையும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியதாயிற்று. வடக்கைப் பூர்வீகமாகக் கொண்ட இராசதுரையும் 1956 லிருந்து 1977 வரை சேர்.பொன். அருணாசலம் - Tamil Wikiசுமார் கால் நூற்றாண்டு காலம் தமிழரசுக் கட்சியுடனும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும் பயணித்துப் பாடம் கற்றபின் தனது அரசியல் பாதையை 1978 லிருந்து மாற்றிக்கொண்டார்.( இது தமிழ்த் தேசிக் கருத்தியலுக்கு எதிரான மனப்பாங்கு என்றோ யாழ்குடா நாட்டு மக்களுக்கு விரோதமான நிலைப்பாடு என்பதாகவோ கருதப்படக்கூடாது.)

ஆனால், மேற்கூறப்பெற்ற நல்லையா மாஸ்டர், தேவநாயகம், ராஜன் செல்வநாயகம், கனகரட்ணம் பின்னாளில் இராசதுரை என்று அனைவருமே பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சிகளில் இணைந்து தமது அரசியலை முன்னெடுத்தார்களே தவிர, (இந்த அரசியலால் கிழக்கில் சில உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் ஏற்பட்டன என்பது உண்மையாகவிருந்தபோதிலும்கூட) கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குத் தேவையான-உகந்த தனித்துவமான அரசியலைக் கட்டமைக்கத் தவறினர். அதனால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் யாழ்குடாநாட்டைத் தளமாகக்கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளால் வஞ்சிக்கப்படும் நிலைமையே தொடர்ந்தது. இன்றும் தொடர்கிறது.

இருந்தபோதிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து 2004 இல் கருணாஅம்மான் வெளியேறிய போதும்-பின்னர் பிள்ளையான் 2008 இல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைத் தோற்றுவித்து கிழக்கின் தனித்துவ அரசியல் பேசிக் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரான போதும்-வியாழேந்திரன் 2020 தேர்தலில் கிழக்கின் அபிவிருத்தி அரசியல் பற்றிப் பேசியபோதும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்த்தனர்.
யாழ்மைய வாத அரசியலால் பாதிப்புற்ற கிழக்கு மாகாணத் தமிழர்கள் வேறு வழி இல்லாமல் அவ்வப்போது இவர்களுக்கான ஆதரவை வழங்கத் தவறவும் இல்லை. அதன் விளைவுதான் 2020 தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானுடையதும் வியாழேந்திரனுடையதும் பாராளுமன்றத் தேர்தல் வெற்றியும் அதேபோல் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை) அகில இலங்கை தமிழர் மகாசபையில் போட்டியிட்ட கருணா அம்மான் 30000 வாக்குகளை (தமிழ் தேசிய கூட்டமைப்பை-தமிழரசு கட்சியை விடவும் 5000 வாக்குகள் கூடியது) பெற்றுக் கொண்டமையும்.

ஆனால் கிழக்கின் தனித்துவமான/அபிவிருத்தி அரசியல் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத் தமிழர்களின் ஐக்கியத்திற்கான-சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான அரசியலைக் கட்டமைக்காது இம் மூவருமே மக்களது எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் மாறாகவும் முரணாகவும் தம்மை வளர்த்துக் கொள்ளும் தமக்குத் தேவையான சுயலாப அரசியலையே கட்டமைக்க முற்பட்டனர். கிழக்கு மாகாணத் தமிழர்கள் இதனைக் காலம் கடந்து உணரவும் தலைப்பட்டனர்.

வடக்கு மாகாண தமிழர்கள் உட்பட ஒட்டுமொத்தத் தமிழர்களும் எவ்வாறு வடக்கைத் தளமாகக்கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட சுய லாப அரசியலைத் தமிழ் தேசிய அரசியல் என்று மயங்கி-நம்பி ஏமாந்தார்களோ அவ்வாறே கருணாஅம்மான், பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகிய மூவரினதும் சுயலாப அரசியல் செயற்பாடுகளைக் கிழக்கின் தனித்துவ அரசியல் என்று மயங்கி-நம்பி கிழக்குத் தமிழர்கள் ஏமாந்துபோயுள்ளனர்.

இன்று ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களும் தங்களுக்கான அர்ப்பணிப்பான உண்மையும் நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் துணிவும் செயற்பாட்டுத் திறனும் கொண்டதொரு அரசியல் தலைமை இன்றி நிற்கின்ற சமகாலத்தில் அதற்குச் சமாந்தரமாகக் கிழக்குத் தமிழர்களும் தமக்கான நம்பிக்கையுள்ளதோர் அரசியல் தலைமை இல்லாமல் திக்குத் தெரியாத காட்டில் திசை மாறிய நிலைமையில் இன்று ஏங்கி (திகைத்து) நிற்கின்றனர். இந்த நிலைமை நீடிக்குமானால் கிழக்கு மாகாணத் தமிழர்களுடைய எதிர்கால சமூக பொருளாதார அரசியல் இருப்பு கேள்விக்குரியதாகிவிடும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் தேசிய தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பு -  Lanka Times

இந்த ஆபத்திலிருந்து மீள்வதற்காகக் கிழக்கைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆர்வலர்களும்-கல்விமான்களும்-துறைசார் நிபுணர்களும்-விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட தொழிலாளர் சமூகமும்-எழுத்தாளர் கலைஞர் ஊடகவியலாளர்களும்-ஆன்மீகவாதிகள் என எல்லாத் தரப்பினரும் இணைந்து கிழக்குத் தமிழர்களுக்கானதோர் தனித்துவமான அரசியல் கட்டமைப்பை-பொறி முறையை-பாதையைக் கட்டமைக்கத் தாமதியாது செயலில் இறங்கவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *