பாதுகாப்பு வழங்குவதற்கு இனி கட்டணம் கேட்கும் பொலிஸார்; பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திலிருந்து திடீர் விலகல்

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமையவணிக நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
பொலிஸ் திணைக்களத்திற்கு ஏற்படும் செலவைக் கருத்தில் கொண்டு, வணிக நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் அதிகாரிகளுக்கு கூடுதல் நேரம் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்த இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மினுர செனரத் ‘சண்டே ரைம்ஸ்’க்கு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களம் முன்னர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டதாகவும், இப்போது அந்த உத்தரவின்படி கட்டணம் வசூலிக்க பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், பொதுமக்களுக்கு இலவசமாகத் திறந்திருக்கும் நிகழ்வுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தப் புதிய முடிவின் கீழ் முதல் நடவடிக்கையாக,கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்திடம் (BMICH)மாதாந்த கட்டணம் செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இடமான BMICH இல் தினமும் பணியில் இருக்கும் 262 பொலிஸ் அதிகாரிகளுக்கு மாதாந்த கட்டணமாக 3.2 மில்லியன் ரூபா செலுத்துமாறு பொலிஸ் திணைக்களம் கேட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொள்ளும் பொது மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக 2003 ஆம் ஆண்டு அந்த இடத்தில் ஒரு நிரந்தர பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், BMICH நிர்வாகமோ அல்லது நிகழ்வு ஏற்பாட்டாளர்களோ இதற்கான கட்டணங்களை செலுத்தத் தவறியதால், சமீபத்தில் முடிவடைந்த சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு பொலிஸாரால் வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் திடீரென திரும்பப் பெறப்பட்டன. இதன் விளைவாக, சுமார் 1.5 மில்லியன் மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட புத்தகக் கண்காட்சியின் முக்கிய பகுதி பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் நடைபெற்றது.
இந்த பிரச்சினை BMICH நிர்வாக மட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()