நீர்கொழும்பில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகளுக்குத் தினமும் மூன்று வேளைத் தாக்குதல்; பலரால் எழுந்து நிற்க முடியாத நிலை

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் வை, ஓ சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்ட 150க்கும் மேற்பட்ட கைதிகள் திட்டமிட்ட மற்றும் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
இந்தக் கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகளால் நாளாந்தம் மூன்று வேளைகளும் (காலை, மதியம் மற்றும் இரவு) திட்டமிட்ட முறையில் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தமைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே சிறைச்சாலை அதிகாரிகள் இந்த சித்திரவதைகளை மேற்கொண்டு வருவதாக அந்த குழு குற்றஞ்சாட்டுகின்றது.
தொடர்ச்சியான இத்தாக்குதல்கள் காரணமாக பல கைதிகள் நடக்கவோ அல்லது நேராக நிற்கவோ முடியாத அளவுக்கு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளான சேனக பெரேரா, சுரேன் டி. பெரேரா, தனுஷ்க டி சில்வா, மனுஷிகா கூரே மற்றும் மாதவ இரியகம ஆகிய சட்டத்தரணிகள் குழுவினர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேரில் சென்று இக்கைதிகளைப் பார்வையிட்டபோது, அவர்களின் உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.
இருப்பினும், கைதிகளுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுவதற்கு சிறை அதிகாரிகள் சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. அத்துடன், அதிகாரிகள் அருகிலேயே நின்று கைதிகளை அச்சுறுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது சட்டத்தரணி சேவையாளர் இரகசியத்தன்மையை முற்றாக மீறும் செயலாகும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் இந்தச் சம்பவம் தொடர்பான உத்தியோகபூர்வ முறைப்பாட்டை ஏற்றுக்கொள்வதைக் கூட மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகள் தகவல்களை மறைத்து வருவதாகவும், பல குடும்பங்கள் தங்களது உறவினர்களான கைதிகள் எங்கு இருக்கிறார்கள் என்ற விபரத்தை அறிய முடியாமல் தவித்து வருவதாகவும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
சில குடும்பங்கள் தங்களது உறவினர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த போதிலும், அவர்களைப் பார்வையிடுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி வழங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்றும், காயமடைந்த கைதிகளுக்கு சுயாதீன மருத்துவக் குழுவொன்றின் உதவியுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
![]()