காணிகளை விட முடியாதென பிரதியமைச்சர் கூறவேயில்லை; பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றுக்காணி

மக்களுடைய காணிகளை விடமாட்டேன் என்ற கருத்தை பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்றத்தில் முன்வைக்கவில்லை. இங்கிருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் பிழைப்புக்காகச் செய்கின்ற கூற்றுக்களே தவிர வேறு எதுவும் கிடையாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், பிரதியமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார். அதாவது, மக்களுடைய காணிகளை விடமாட்டேன் என்ற கருத்தை முன்வைக்கவில்லை.
அதாவது, இராணுவத்தினுடைய நடவடிக்கைகளுக்கான காணிகள் இருக்கின்றது. அது சம்பந்தமாக நாங்கள் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கான காணிகள் இருக்கும்.
இது தொடர்பாக, அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பிறகு, பல்வேறு விதமான கருத்துக்கள், விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இங்கிருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகள், உண்மையிலேயே தங்களுடைய அரசியல் பிழைப்புக்காகச் செய்கின்ற கூற்றுக்களே தவிர வேறு எதுவும் கிடையாது என்பதுதான் என்னுடைய கருத்து.
அதேபோன்று நாங்கள் சொல்லுகின்றோம், அதன் பிறகும் கூட நாங்கள் இது தொடர்பாக கௌரவ ஜனாதிபதியோடு நாங்கள் பேசினோம். அப்ப அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மிகத் தெளிவாக நாங்கள் சொல்லுகின்றோம்; மீண்டும் மீண்டும் சொல்லுகின்றோம். அதாவது, விடுபட வேண்டிய காணிகள், விடுவிக்கக் கூடிய காணிகள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அனைத்தையும் விடுவிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். என்கின்ற கருத்தை மாத்திரம் இந்த இடத்தில் நான் சொல்லி வைக்கின்றேன்.
நான் இது தொடர்பாகப் பல தடவைகள் சொல்லியிருக்கின்றேன் என்பது உண்மை. இருந்தபோதிலும் கூட, மீண்டும் நாங்கள் சொல்லுகின்றோம், இன்றைக்கு இது தொடர்பாக இங்கிருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளும், அதே நேரத்தில் மக்கள் என்று கூறுகின்றவர்களும் இதற்கு எதிராகப் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.
நாங்கள் கேட்கின்றோம், கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இழுத்து மூடப்பட்டிருந்த வீதிகள், 40 வருடங்களுக்கு மேலாக எங்களுடைய வடமாகாணம் முழுவதும் சோதனை சாவடிகளால் நிரம்பி வழிந்த பிரதேசம் என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம். ஒரு சோதனை சாவடியை கூட காண முடியாத நிலைமை இருக்கின்றது. 37 வருடங்களாக மூடப்பட்டிருந்த பலாலி வீதி விடுவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், பல இடங்களில் பல வீதிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. மக்களுக்கான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றது.
இன்றைக்கு மிகத் தீர்க்கமாக இருக்கின்ற ஒரு சில இடங்கள் மாத்திரமே இழுபறியான நிலைமையில் இருக்கின்றது. அதற்கும் கூட நாங்கள் கூடிய சீக்கிரமாக முடிவினைக்கொண்டு வருவோம்.
பலாலி வைத்தியசாலை கட்டப்பட்டிருக்கின்றது. அந்தக் காணி இன்னொருவருக்குச் சொந்தமாக இருக்கின்றது. அது தொடர்பாக நாங்கள் வேண்டுமென்றால், மீண்டும் உரிய நபரோடு பேசுவதற்கும், பலாலி வைத்தியசாலையை இழுத்து மூடுவதா, இடித்துத் தள்ளுவதா என்பது தொடர்பாக நாங்கள் மீண்டும் அவரோடு பேசி, தேவையாக இருந்தால் அவருக்கான, அந்தக் காணிக்கான நட்டஈடு அல்லது அதற்கான ஒரு புதிய காணியையும் கூட பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இன்றைக்கு ஆரம்பமாகியிருக்கிறது. உரிய பாதுகாப்பு அதிகாரிகள் அது தொடர்பாகச் செயல்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் – என்றார்.
![]()