கவிதைகள்

வார்த்தைகள்…. கவிதை….  சி.ரஞ்சிதா

அகத்தை அளந்திடும்
அளவுகோல் நீ…!

வார்த்தைகளுக்கு வடிவம்
அளித்திடும் சிற்பி நீ…!

நெஞ்சத்து வஞ்சனைகளைக்
கணித்துக் காட்டிடும்
சோதிடம் நீ…!

வாழ்த்துகளை வரமாக்கி
மனம் மகிழ
வைப்பாய் நீ…!

செருக்குக் கொண்டலையும்
செம்மையற்ற மேனியரையும்
அன்பின் வழி
ஒழுகிடும் இனியவரையும்
கண்ணெதிர் காட்டிடும்
கண்ணாடி நீ…!

நீ இசைத்திடும்
இன்னிசைக் கீதம்
இனித்திடுமெனில் இன்பம்
கொள்வர் அன்பர் …!

வசைப்பாடிடும் எனில்
துயருறுவர் தீயர்…!

அம்பாகவும் அன்பாகவும்
மாறிடும் வித்தையைத்
தன்னுள் கொண்டவள் நீ…!

உன்னைப் பக்குவமாய்
நாவில் நவில்பவருக்கே
இவ் உலகம் சொந்தமம்மா
மற்றோருக்கு எல்லாம்
நரகமே நடைபாதை
ஆகுமம்மா…!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *