இலங்கை

குற்றவாளிகளிடமே நீதியைப் பெறுமாறு சர்வதேசம் கூறுகிறது; வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்

தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் விட்ட தவறு தான் இன்று பெரிய தலைவலியாக வந்து நிற்கின்றது என வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் செயலாளரும்-வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியுமான சி.ஜெனிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

2009இல் இருந்து இன்றுவரை எந்தவிதமான உள்நாட்டில் தீர்வும் கிடைக்காத பட்சத்தில் தான் நாம் சர்வதேச விசாரணை கோரி தொடர்ச்சியாக போராடி வருகிறோம்.ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு அண்மையில் செம்மணியில் முன்னெடுத்த அடையாள உண்ணாவிரத கவனயீர்ப்புப் போராட்டத்திலும் கூட நாம் உள்ளகப் பொறிமுறை வேண்டாம் என்பதனை வலியுறுத்தியிருந்தோம்.

குற்றவாளிகளால் ஒருபோதும் நீதி பெற்றுத்தர முடியாது,உண்மையைக் கண்டறிய முடியாது அதேநேரம் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் முடியாது.

இந்நிலையில் இலங்கை தேசிய சமாதானப் பேரவை என்ற அமைப்பு இந்தப் பிரச்சினைக்கு இலங்கையின் நீதி அமைச்சரிடம் நீதியைக் கோருகின்றனர்.இதனூடாக அவர்கள் சர்வதேச விசாரணையை புறந்தள்ளி உள்ளக விசாரணையை கோருகின்றனர்.இதனூடாக இவ்வளவு காலமும் போராடி வருகின்ற எம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை கிடைக்க விடாமல் தடுக்கின்றனர்.எமது போராட்டத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகமாக ஆதரவை வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை பாராளுமன்றம் அனுப்பி வைத்தனர்.இவ் விடயம் சர்வதேசத்தில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்து விட்டனர் என்ற மாயையை உருவாக்கியுள்ளது.இதனூடாக உள்ளக விசாரணை ஊடாக தீர்வு வழங்கலாம் என்ற தவறான எண்ணம் சர்வதேச சமூகம் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. நாம் அன்று விட்ட தவறு இன்று பிரச்சினையாக மாறியுள்ளது.

இலங்கை தேசிய சமாதான பேரவை செய்யும் செயற்பாடும் தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைத்து அரசினையும்-இராணுவத்தையும் காப்பாற்றுவதாகவே அமைந்து காணப்படுகின்றது.அதற்காகவே அவர்கள் நீதி அமைச்சரிடம் நீதி கோருகின்றனர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *