இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஏன் அதிக நிதி?

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024 இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவை விட 72 சதவீத அதிகரிப்பாகும். இவ்வாறு பாரியளவு நிதி ஒதுக்கீட்டுக்கான காரணத்தை ஜனாதிபதியும், அரசும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், “2024ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவுகள் 6.6 பில்லியன் ரூபாவாகும். அது 2025 இல் அநுரகுமார திஸாநாயக்கவின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தில் 2.9 பில்லியன் வரை குறைக்கப்பட்டது. அது தொடர்பில் அரசால் பாரிய பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அது 11.37 பில்லியனாக உயர்வடைந்துள்ளது.

2024 இல் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஒதுக்கப்பட்டிருந்த நிதியை விட இது 72 சதவீத அதிகரிப்பாகும். ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தமக்குக் குறிப்பிட்டளவு நிதி தேவை ஏற்படும் என்பதை இப்போதாவது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்து கொண்டிருப்பார் என நம்புகின்றோம்.

2024 இல் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடு 1.15 பில்லியனாகும். 2025 இல் இது 1.17 பில்லியனாக அதிகரிக்கப்பட்டது. 2026 இற்காக நிதி ஒதுக்கீடு 0.9 பில்லியனாக குறைவடைந்துள்ளது. அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆனால் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு ஓராண்டுகள் சுமார் 6 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதியின் பதில் என்ன? கடந்த காலங்களில் ஜனாதிபதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட போது அவற்றை கடுமையாக விமர்சித்த ஜே.வி.பி.யினர் இப்போதாவது யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். தமது சட்டை பைகளை நிரப்பிக் கொள்வதற்காக எந்தவொரு ஜனாதிபதியும் நிதியை ஒதுக்கிக்கொள்வதில்லை.

அது மாத்திரமின்றி கடந்த காலங்களில் நிதி அமைச்சு ஜனாதிபதியின் கீழிருப்பது முற்றிலும் தவறு என்றும் இவர்கள் கூறினர். ஆனால், இன்று என்ன நடந்திருக்கின்றது? பொருளாதாரம் தொடர்பில் நிபுணத்துவம் அற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது நிதி அமைச்சை தன்வசப்படுத்தி, தனக்கேற்றவாறு நிதி ஒதுக்கீடுகளை செய்து கொண்டிருக்கின்றார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதியும், அரசும் நிச்சயம் பதிலளிக்க வேண்டும்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *