இலங்கை

ஜெனீவாவில் இன்றைய தீர்மானத்தில் ஏமாற்றம்; ஆனாலும் நிறைவேற்றப்பட வேண்டும் 

இலங்கை தொடர்பான தீர்மானத்தை கூடிய அளவிற்கு வீரியம் குறையாத வண்ணமாக முக்கிய விடயங்களை தொடர்ச்சியாக உள்ளடக்கியதாக தீர்மானத்தை நிறைவேற்ற பாடுபடுங்கள் என பிரித்தானிய உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்தார்.

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இன்று ஆறாம் திகதி ஜெனீவாவிலே இலங்கை சம்பந்தமான புதிய தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அனேகமாக 60 இன் கீழ் ஒன்று என்று இலக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

இலங்கை தொடர்பில் சென்ற வருடம் தீர்மானம் ஒன்றை இணை அனுசரணை நாடுகள் கொண்டு வந்த போது இலங்கை அரசாங்கம் வெளிப்படையாக நாங்கள் அதை எதிர்க்கிறோம் என சொல்லி இருந்தாலும் வாக்களிப்பு நேரத்திலே வாக்களிப்பை கோரவில்லை.

இந்தத் தடவையும் அந்த எதிர்பார்ப்போடு இணை அனுசரணை நாடுகள் இருக்கின்றன. அதன் காரணத்தினால் இலங்கை அரசாங்கம் கேட்ட திருத்தத்தை கூட அவர்கள் தீர்மான வரைவில் சேர்த்து இருக்கிறார்கள் என கருதுகிறோம். அது எமக்கு ஏமாற்றத்தை தருகிறது.

தீர்மானத்தின் வீரியங்களை குறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் அப்படியான நடவடிக்கை எடுத்திருக்கக்கூடும். தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. சில வார்த்தை பிரயோகங்களினால் சில நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த தீர்மானத்தால் எந்த பிரயோசனமும் இல்லை என சிலர் கூறுவர். இதை எரித்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் சர்வதேசத்தினுடைய பார்வை இலங்கை மீது தொடர்ச்சியாக இருக்க வேண்டுமாக இருந்தால் விசேடமாக பொறுப்பு கூறல் சம்பந்தமாக நல்லிணக்கம் சம்பந்தமாக சர்வதேசத்தினுடைய பார்வை இலங்கை மீது விசேடமாக வடக்கு கிழக்கிலே தமிழ் சமூகம் மீது இருக்க வேண்டுமாக இருந்தால் இந்த தீர்மானங்கள் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட வேண்டியது அத்தியாவசியம். பலருக்கு இது புரியாத விஷயமாக இருக்கலாம்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு இலங்கை சம்பந்தமான விடயங்களில் கரிசனை செலுத்த முடியும். இதனால் தீர்மானம் நிறைவேற்றப்படுவது அத்தியாவசியம்.

இணை அனுசரணை நாடுகளுக்கு நன்றி செலுத்துகிறோம். பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து சில ஏமாற்றங்கள் இருந்தாலும் கூட அந்த ஏமாற்றங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறோம்.

இந்த முயற்சியிலே அவர்கள் ஈடுபட்டு தீர்மானத்தை முன்வைத்து அதை நிறைவேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளை எடுப்பதற்காக பிரித்தானிய தலைமையிலான இணை அனுசரணை நாடுகளுக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றி செலுத்துகிறோம். கூடிய அளவிற்கு வீரியம் குறையாத வண்ணமாக முக்கிய விடயங்களை தொடர்ச்சியாக உள்ளடக்கியதாக தீர்மானத்தை நிறைவேற்ற பாடுபடுங்கள் என அவர்களை வினயமாக கேட்டுக்கொள்கிறோம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *