‘பெலியத்தே சனா’வுக்கு அநுரவுடன் தொடர்பா?; விமலிடம் இன்று விசாரணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை இன்று திங்கட்கிழமை தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
‘பெலியத்தே சனா’ என்பவரை ஜனாதிபதியுடன் தொடர்புபடுத்தி ஊடகங்களுக்கு அளித்த கருத்து தொடர்பான உண்மைகளை விசாரிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்படி, இன்று முற்பகல் 10 மணிக்கு தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தங்காலை சீனிமோதரவில் 700 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிப்பு சம்பவம் தொடர்பாகத் தனது படகுடன் கைது செய்யப்பட்ட பெலியத்தே சனா, 9 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2ஆம் திகதி ஊடகங்களிடம் பேசிய விமல் வீரவன்ச,
கடந்த உள்ளூராட்சித் தேர்தல் இறுதிக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு ஜனாதிபதி அநுர, உணவு அருந்தச் சென்ற வீட்டின் உரிமையாளரான, மக்கள் விடுதலை முன்னணியுடன் நெருங்கிய தொடர்புடைய மற்றும் பணம் செலவழிக்கும் நபராக இருந்த சனத் வீரசிங்க என்ற ‘புவக் தண்டா’ என்பவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கை செய்யப்பட்டார்.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி.) சில குழுக்களின் அழுத்தங்களால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அம்பாந்தோட்டையில் மீட்கப்பட்ட 700 கிலோ போதைப் பொருள் தொடர்பில் இறுதியாக இன்று ( வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டவர் இவர்தான். இவரின் படகு மூலமே போதைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பல்வேறு அழுத்தங்களின் பின்னர் இறுதியாக அவரை கைது செய்துள்ளனர். இவர் மக்கள் விடுதலை முன்னணியின் பிரபல உறுப்பினராவார். இந்த அரசாங்கம் எந்தளவுக்கு கூறினாலும் விடுவிக்கப்பட்ட323 கொள்கலன்கள் ஊடாகவே போதைப் பொருட்கள் வந்துள்ளன. இவருடன் டுபாயில் இருக்கும் பிரபல பாதாள குழுக்களை சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளனர். அவர்களே இந்த நபருக்கு பணம் அனுப்புவர். இதன்படி போதைப்பொருள் கொண்டு வரப்படுவதும், போதைப்பொருட்களை பிடிப்பதும் அரச அனுசரணையிலேயே நடக்கின்றன என்றார்.
இதேவேளை தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு தனக்கு இதுவரை எந்த அறிவிப்பும் எழுத்துபூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ வழங்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
![]()