அம்மா சீக்கிரம் வாங்க… கவிதை… Pax ரவிச்சந்திரா

போர் ஓய்ந்தும் தணல் ஆறாத யுத்த பூமியில்
முறிந்த பனையாய் வாடும் மனிதம்
ஆறாத மனக்காயம், பெரும்பிணியாய் மாறிட
நடைப்பிணமாய் சிதையும் புனிதம்
மது, போதைவஸ்து, கேரள கஞ்சாவில்
பாதாள கும்பல் தேடும் ஆதாயம்
புலம்பெயர்ந்தவர் அனுப்பும் பணத்தால்
நஞ்சாகும் இளைய சமுதாயம்
விந்தியா முதல் சிறுமி ஷிரோமிவரை
பாலியல் வன்முறைக்குப் பலியான அவலம்,
காணொளியும், வானொலியும் சொல்லியழ
அநாசாரமான கொடுந் துயரம்

புலம்பெயர்ந்து நீ போகத், தாயே
உனைப் பிரிந்து வருந்தும்
உன் மொட்டு, இன்றோ பூவனமாய்;
பூத்துக் குலுங்கும் வண்ணச் சிட்டு
கண்படும் என் அழகை மொய்க்கும்
விழிகளிலோ போதை: களவாய்
சிதைத்திடத் துடிக்கும் காமப்பேய்களில்
துச்சாதனனின் கீதை
வேலியே பயிரை மேயும் அபாயமாய்
மாமன் விழிகள்- கண் சாடையால்
என்னைத் துண்டாடத் துடிக்கும்
அண்டை வீட்டு காமக் காளைகள்
விளையாடப்போனாள்-விளையாட்டாய்
தொட்டுப் பார்த்து இரசிக்க
தடவல்களிலும், உரசல்களிலும்
காமச்சூடு தணிக்கும் ஈனப்பிறவிகள்
பள்ளி செல்லும் வழியோ தீ மிதிப்பு
பருவம் பூத்த மேனியில் அனலின் தகிப்பு
பயமாய் இருக்குது தாயே, மானம் அழிந்து
நான் மடியுமுன், சேயைக் காக்க வந்துவிடு
கண் படும் போதெல்லாம் புண்ணில்
விழும் அமிலத்துளிகளாய் பூ நெஞ்சம்
புண்படும் அவலம், இடையினம் தொட்டு,
மெல்லினம் சிதைய, வல்லாங்கு செய்யுமோ
வல்லினம் பூ மனதில் அச்சம்

பூ மொய்க்கும் தேனீக்களும், புண் மொய்க்கும்
ஈக்களும் நிறைந்த உலகில், காமுகர் பார்வை
கருந்தேளாய் பொன் மேனி ஊரக் கலங்கும்
நெஞ்சம், அஞ்சித் துடிக்கும் இதயம்
நீராடும் போது நிம்மதி நாடி தாயே
கண்ணீரில் நீராடும் என் விழிகள்,துயிலும்
போதும் அஞ்சி கண்ணீரால் நனையும்
என் தலையணை, பஞ்சணைகள்
தேனீக்கு கொடுக்கும், ரோஜாவிற்கு முள்ளும்
ஈந்த இறைவன் பெண்மைக்குத் தந்தது ஏதம்மா?
என் அழகே எனக்குப் பகையாக பரிதபித்து
புலம்பியழைக்கின்றேன் வா அம்மா சீக்கிரம் வா
தாய்மடி காணாத பருவக்குமரி-
பூத்து மணம் வீசும் பருவக்கொடி
இன்றும்; உந்தன் சின்ன ராஜகுமாரி
கொழுகொம்பில்லாத முல்லைக்கொடி
உன் மடியில் முகம் புதைத்து மனப்பாரம்
தீர அழவேண்டும், அச்சமின்றி நான் வாழ-
அருகில் அன்னையே நீ வேண்டும்
வருவாயா அம்மா? சீக்கிரம் வந்துவிடு
இரவுக்கும் விடியல் உண்டு-இறைவன்
காப்பார் நம்பிக்கை உண்டு
தாயே வந்துவிடு உன் குழந்தை
தமிழினி என்னைக் காத்திடு

இன்பமே சூழ்க-எல்லோரும் நலமே வாழ்க
எல்லாப் புகழும் இறைவனுக்கே
![]()