சுப்பரமணிய பாரதி….. கவிதை…. Pax ரவிச்சந்திரா

ஓ முண்டாசுக் கவியே!
முத்தமிழ் பெற்றெடுத்த அக்கினிக்குஞ்சே!
கண்கள் சிவந்து, கட்டு மீசை
துடிக்கும்போதெல்லாம் உன் நெஞ்சில்
புரட்சியின் கொதிப்பு
நெற்றிக் கண்களிலோ அநீதியை
சுட்டெரிக்கும் தகிப்பு
தேச விடுதலைக்காய், வெள்ளையரைச்
சாடியபோது உன் கவிதைகளில்-
சத்தியத்தின் உருத்திர தாண்டவங்கள்
சமூக விடுதலைக்காய் “
சாதியத்திற்கு சாவு மணி அடித்தபோது,
“மனுஸ்மிருதியை”கவிதை நெம்புகோலால்
புரட்டிப்போட்ட புதிய ஆக்கிமிடிசின் அவதாரங்கள்
பெண் விடுதலைக்காய் ஒலித்த
உன் குரல் தமிழ் நாடு
கேட்ட இடியின் நாதம்
தேச விடுதலையோ
உன் குருதியில் கலந்த கீதம்
![]()
பாரதத் தாயின் அடிமை நிலை
கண்டு கொதிக்கும் நெஞ்சோடு நீ பிறந்தாயோ?
குடித்த தாய்ப் பாலையும் உன் அன்னை
புரட்சித் தீயில் சுடவைத்து தந்தாரோ?
ஓ முண்டாசுக் கவியே!
உன் தோற்றமும் புரட்சி
உன் சிந்தனையோ-அடிமை
மானுடத்திற்கு புதுப்பள்ளியெழுச்சி
சாதி மதங்களை கடந்து மனித நேயத்திற்காய்
நீ புரிந்த யுத்தம், புதிய குருN~த்திரம்,
புதிய கீதையாய் யாத்த-சாதியம்
கடிந்த கவிதைகளோ பிரம்மாஸ்திரம்
வறுமை வாட்டியபோதும்-உன் தமிழ்
இரந்து பாடவில்லை-
பொருள் கேட்டு எவரையும்
பொய்யாய் புகழ்ந்தும் பாடவில்லை

அக்கிரகாரமே ஆட்டங் காண சாதியம்
கடந்த உன் வேணு கானம்
கவிதைகளால் யாத்த வேள்வியோ
அஞ்ஞான இருள் கலைக்கும் ஞான யக்ஞம்
உன் கானமோ தாழ்த்தப்பட்டவர்கள்; வாழ்விற்கு
புதிய விடியல் -சமத்துவமும்,
சகோதரத்துவமும் ஓங்கிட
தேசத்திற்கோ புதிய எழுச்சி, வெள்ளையர்
அடிமை மோகம் ஒழிந்திட புதிய பள்ளியெழுச்சி
தீண்டாதான் மார்பிலும் முப்புரி நூல் போட்டு
புதிய சமூகம் படைத்த பிரம்மனும் நீ
சாதியக் குற்றம் பரிந்த பார்பன சமூகத்தை
நெற்றிக் கண்ணால் வாட்டிய முக்கண்ணணும் நீ
கடமையே வழிபாடு, கடமையே யோகம்,
கடமையே வேள்வி, சாதி மதங்களை
கடந்த உன்தன் சங்க நாதம்
சத்திய யுத்தத்திற்காய் முழங்கிய பாஞ்சஜன்யம்
நாறிக்கிடந்த சமூகத்தின்
மனஅழுக்கை வெளுத்தவனே
உன் புரட்சியால் பூவும் கருகவில்லை,
புல்லும் சாகவில்லை
சத்திய நெருப்பாய் ஜொலித்த அகிம்சாவாதி நீ
அக்கிரகாரம் காணாத அதிசயப் பரிணாமம் நீ

காதலையும் சுவைபடப் பாடி-
காதலரையும்; காமுறவைத்த
வேனுகோபாலன் நீ,
அறியாமை இருள் விலகி, அச்சமும்,
அடிமைத்தனமும் நீங்கிட தேசபக்தி ஓங்கிட
கர்ச்சித்த சுதந்திரப் போராளியும் நீ
உன் சிந்தனையிலும் புரட்சி,
உன் பாடல்களிலும்;; எழுச்சி
பாமரனும் கவிதைச் சுவையறிய,
அழகு தமிழால்
கவிதை புனைந்த, அற்புதச் சித்தன் நீ
மானுடத்தை கவிதை நெருப்பால் புடமிட்ட
தமிழ் கொல்லனே, அலங்கார
இலக்கியங்கள் மத்தியில் உன் கவிதை வடிவம்-
அதர்மத்தை அழிக்க- நீ எடுத்த நரசிம்ம அவதாரம்?
பாரதி உன் பெயரிலும் தீ –உன் எழுத்திலும் -தீ
பாரதத்தின் புரட்சித்தீ-நீ,
புரட்சிப் பாவலன் நீ
வேள்வியாய் கவிதை தீ
யாத்த புதிய வேதியன் நீ
கவிதைத் தீயால் நீ மூட்டிய புரட்சி
இந்திய வரலாற்றில் காலத்தால் அழியாத மாட்சி
ஒடுக்கப்பட்ட மானுடத்திற்கு உன் வாழ்வோ
நம்பிக்கை தரும் புதிய எழுச்சி
மகாத்மாவுக்கும், கவி இரவீந்திரநாத் தாகூருக்கும்
உன் ஆளுமையின் பரிமானம் புரிந்திட-
கர்வத்தோடு கர்ச்சித்த வணங்காமுடி நீ
புதுச்சேரி வெள்ளச் சேதம் கண்டு
புண்பட்டு அன்னையிடம் வேண்டிடப் பிறந்த
கவிதையோ“காணி நிலம் வேண்டும்”
இராப்பிச்சை எடுத்த தேச பக்தன்
பிரமச்சாரி நீலகண்டனின் வறுமை கேட்டு,
கொதித்த நெஞ்சம் குமுறிடப் பிறந்த பாடலோ,
“தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம் “
“பராசக்தியின் பக்தனே-அன்னையோ உன் நெஞ்சில்
அனலாய்க் கொதித்திட, சித்தனும் நீ,
அடிமை மனங்களில் புத்தொளி படர்ந்திட
புரட்சிப் பண் பாடிய பித்தனும் நீ
சிங்களத் தீவுனுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
ஈழத் தமிழர் எம்மை மறந்து பாடினாயோ –கவியே
தமிழ் ஈழத்தாயகத்தை மறுத்துப் பாடினாயே?-
உன் புரட்சி நெருப்பு எங்கள் நெஞ்சைப் பற்றிட
நெஞ்சம் துடிக்க, இரத்தம் கொதிக்க,
வங்கக்கடலும், பாக்கு நீரிணையும்
ஒன்றாய்ச் சிவக்க-வேங்கைகளாய்ப்
போராடி வீழ்ந்த மறவர் நாம்,
பாலமின்றிப் பாதையின்றி-நாதியற்று
பாக்கு நீரிணையில் நாளும்
மூழ்கிய அகதிகளும் நாம்
தமிழின் கொடுமுடியில் பூத்த அக்கினிப் பூவே
-உன் நிமிர்ந்த நெஞ்சும், நேரிய பார்வையும்
கண்டோ-காலதேவனே மரணவாயிலில் உன்னை
கைகூப்பி வரவேற்றுக் கௌரவித்தான்?
புகழுக்கும் வணங்காத தலை-
ஏழ்மையிலும்
பொருளுக்காய் அடிபணியாத
பொற்சிலை, வளமான வாழ்வும்
கனவாக, வறுமைத் தீ மித்த
போராளி வாழியவே
நெஞ்சை நிமிர்த்தி- தமிழன் நான்
, பாரதம் என் தாயகம்
என்று சிந்து பாடிய சுதந்திரச் கவிஞன் நீ
காலமுள்ளவரை-ஓ முண்டாசுக் கவியே
தமிழ் உலகம் உன்னை மறவாது
உன்னை மறந்தால் தமிழ் வாழாது
தூங்கிக் கிடந்த அடிமைச் சமூகம் விழித்தெழ-
விடுதலைச் சுப்பிரபாதம் பாடிய
சுதந்திரப் பித்தன்
அன்னை பராசக்திப் பக்தன்
சுப்பரமணிய பாரதி-வாழிய வாழியவே

இன்பமே சூழ்க-எல்லோரும் நலமே வாழ்க
எல்லாப் புகழும் இறைவனுக்கே
![]()