இலங்கை

இராணுவத்தை தண்டிக்கமாட்டோமென்று கூறுவோரால் உள்நாட்டு பொறிமுறை எப்படிச் சாத்தியமாகும்?

இராணுவ வீரர்கள் எவரும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று கூறினால் உள்நாட்டுப் பொறிமுறையை ஏன் இலங்கை அரசாங்கம் வலியுறுத்துகிறது எனக் கேள்வியெழுப்பியுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே இருக்கிறது. அதன் அடிப்படையில் சர்வதேச நீதிமன்ற பொறிமுறையே தற்போதைய நிலையில் தேவை எனவும் வலியுறுத்தினார்.

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் சர்வதேச தலையீட்டை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பது தொடர்பிலும் உள்நாட்டுப் பொறிமுறையை வலியுறுத்துவது தொடர்பிலும்   கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேசப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இலங்கை அரசாங்கம் சர்வதேச பொறிமுறையை நிராகரிக்கின்ற போது உள்நாட்டு பொறிமுறையொன்று இருக்க வேண்டும்.

உள்நாட்டு பொறிமுறையை வைத்துக்கொண்டு சர்வதேச விசாரணையை நிராகரித்தால் பரவாயில்லை.16 வருடங்களாக உள்நாட்டு பொறிமுறைமைக்காக எதுவுமே செய்யப்படவில்லை.

போர் குற்றங்களுக்காக படையினரும , இராணுவத்தினரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். உள்நாட்டு பொறிமுறையில் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று சொன்னால் பிறகு எதற்கு உள்நாட்டு பொறிமுறை?

சர்வதேச விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே இருக்கிறது. அதன் அடிப்படையில் சர்வதேச நீதிமன்ற பொறிமுறை அமைக்கப்பட வேண்டும்.

தமிழ் கட்சிகளுடன் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற சந்திப்புக்களில் தமிழர் பிரச்சினை தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. சுவிட்சர்லாந்து அரசாங்கம் சமஸ்டி பற்றி ஒரு கற்கை சுற்றுலாவை ஏற்பாடு செய்தது. அதில் எல்லா கட்சி பொதுச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்குச் செல்ல முடியவில்லை எங்கள் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் கலந்து கொண்டார் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *