ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளோடு தொடர்ச்சியாக சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளோடு தொடர்ச்சியாக உரையாடலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய குழு கூட்டத்திலே வலியுறுத்தப்பட்டது. எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த பொறுப்புகளை பகிர்ந்து, எந்தெந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தெந்த நாடுகளுடன் தொடர்ச்சியாக உறவைப் பேண வேண்டும் என்ற சில ஒழுங்குகளை எதிர்வரும் நாட்களில் செய்ய இருக்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு, எமது கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும் நானும் கையொப்பமிட்டு அனுப்பிய அறிக்கைகள் அனைத்தும் மத்திய செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன. அது சம்பந்தமான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
மனித உரிமை பேரவையில் தற்போது நிறைவேற்றப்பட இருக்கிற தீர்மானம், 60-வது கூட்டத் தொடரிலே இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் ஊக்குவிப்பதற்காக முன்வைக்கப்பட்டிருக்கிற முதலாவது வரைவு சம்பந்தமாக நாளைய தினம் (இன்றையதினம்) உத்தியோகப் பற்றற்ற ஒரு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் வேறு விடயங்களை சேர்த்துக் கொள்வது, திருத்துவது சம்பந்தமான விடயங்கள் பேசப்படும்.
இதிலே எங்கள் கட்சியினுடைய ஈடுபாடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. பிரித்தானியாவோடு பிரதானமாகவும் இணைஅனுசரணை நாடுகளுடனும் நாங்கள் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறோம். இதிலே என்னென்ன விடயங்கள் முக்கியமானவை, கைவிடப்பட முடியாதவை என்பது சம்பந்தமாக நாங்கள் பேசியிருக்கிறோம்.
மற்றைய உறுப்பு நாடுகளோடு தொடர்ச்சியாக உரையாடலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தக் கூட்டத்திலே வலியுறுத்தப்பட்டது. எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த பொறுப்புகளை பகிர்ந்து கொடுப்பதற்கு கூட்டாக நிலைப்பாட்டை எடுத்து எந்தெந்த நாடுகளுடன் தொடர்ச்சியாக உறவைப் பேண வேண்டும் என்ற சில ஒழுங்குகளை எதிர்வரும் நாட்களில் செய்ய இருக்கிறோம்.
நாங்கள் எழுதிய கடிதங்கள் பற்றி விளக்கங்களும் கொடுக்கப்பட்டது. இன அழிப்புக்கான மன எண்ணம் வெளிப்படுகிற வண்ணமாக பல சாத்தியங்கள் வெளிவரத் தொடங்கி இருக்கிறது. அதில் பிரதானமானது, செம்மணியில் இருக்கிற மனிதப் புதைகுழி சம்பந்தமாக எங்கள் கடிதங்களில் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறோம். சர்வதேச ஈடுபாடு அகழ்வு பணி நடைபெறும் தருணத்தில் இருந்து இருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கு மேலதிகமாக சர்வதேச நீதிக்கான நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இலங்கை சம்பந்தமான விடயங்களை பாரப்படுத்துவது சம்பந்தமாகவும் உறுப்பு நாடுகளுக்கு தெளிவாக கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
ஒரு முழுமையான அரசியல் தீர்வு, தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக முன் வைக்கப்பட வேண்டுமாக இருந்தால் புதிய அரசியலமைப்பு, வடகிழக்கிலே அதிகூடிய அதிகார பகிர்வு, சமஷ்டித் தீர்வுடனான ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்,அரசாங்க மாகாண சபை தேர்தலை காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும் என எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
சர்வதேச சமூகம் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்து இருக்கிறது. உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்றமை எமக்கு ஏமாற்றம் அளிப்பதாக நாங்கள் கூறி இருக்கிறோம். உறுப்பு நாடுகள் உலகளாவிய நியாயதிக்கத்தை நிரூபித்து இலங்கையிலே குற்றம் செய்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியும் அதற்கு சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையை அதற்கு அந்த நாடுகள் பாவிக்கலாம் என்று மனித உரிமைகள் ஆணையாளர் கூறியது மிக மிக வரவேற்கத்தக்க விடயம்.
அதைவிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் ரோம் சட்டத்திலே இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்ற ஒரு சிபாரிசை முன்வைத்திருக்கிறார்கள். இது மிக மிக முக்கியமான விடயம்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இதனை வலியுறுத்தி வந்திருக்கிறோம். முதல் தடவையாக இந்தத் தடவை நாட்டினுடைய மனித உரிமை ஆணைக்குழுவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவும் இதை வலியுறுத்திச் சொல்லி இருப்பது மிக முக்கியமான ஒரு விடயமாக கருதுகிறோம். இலங்கை அரசாங்கத்திற்கு உறுப்பு நாடுகள் இது சம்பந்தமாக தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு – என்றார்.
![]()