இலங்கை

அடுத்த இரு வருடத்திற்கு இலங்கை கண்காணிப்பில்; ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அதிகாரம் நீடிக்கும் 

இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது.

இலங்கை விவகாரத்தைக் கையாளும் பிரதான அனுசரனை நாடுகளான பிரிட் டன், கனடா, மலாவி, மொன்டிநீக்ரோ, வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை இணங்கிய இலங்கை தொடர்பான நகல் பிரேரணைக்கு அமைய இவ்விடயம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

“இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமை களை மேம்படுத்துதல்” என்ற தலைப்பி லான இந்த இந்த நகல் பிரேரணை சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கலந்தாய்வுகளின் பின்னர் இறுதி செய்யப்படும் எனத் தெரிகின்றது.

இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027 ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு, இலங்கை தொடர்பான முக்கியகுழு உறுப்பு நாடுகளான ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஆதரவை வழங்கவுள்ளன.

இதன்படி இலங்கைக்கான பொறுப்புக் கூறலுக்கான கால அவகாசமும் நீடிக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம், இலங்கையில் மனித உரிமைகள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான, சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட உறுப்பு நாடுகள் உட்பட, தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும், சான்று சேகரிக்கும் பொறிமுறையாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல தசாப்தங்களாக நிலவும் பிளவுபடுத்தும் இனவெறி அரசியல் மற்றும் இன மோதல்களின் விளைவாக ஏற்பட்ட தீங்குகள் மற்றும் துன்பங்களை ஒப்புக்கொள்வதையும் இந்த தீர்மானம் ஏற்கிறது.

இலங்கையில் பல புதைகுழி தளங்களை அடையாளம் காண்பது குறித்தும், போதுமான வளங்களுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

அதேநேரம் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் சுயாதீனமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் இந்தத் தீர்மானம் கோருகிறது.

மேலும் ,பிரதான அனுசரணை நாடுகள் சார்பாக முன்வக்கப்படவுள்ள புதிய பிரேரணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதிக்கு முன்னதாக செயலகத்திடம் சமர்ப்பிக்குமாறும் இலங்கை கோரப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *