செம்மணியில் தோண்டத் தோண்ட வருகிறது! ; 200 ஐ தாண்டிய எலும்புக் கூடுகள்; நேற்றும் 12 கண்டுபிடிப்பு; ஒரு வாரத்தில் 59 கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழியின் 2 ஆம் கட்ட அகழ்வில் 3 ஆம் பகுதி கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலான 8 நாட்களில் மட்டும் 59 மனித எலும்புக்கூட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் இதுவரை 39 தினங்கள் அகழ்வு பணி நடைபெற்றுள்ள நிலையில் 209 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 191 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் 39ஆவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டன .
இந்த அகழ்வுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மேலும் கூறுகையில்,
இன்று (நேற்று) புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டன . 10 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன .இதுவரை மொத்தமாக 209 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டன .
இன்றைய தினம் (நேற்று) அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் மொத்தமாக 191 எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியில் 72 சான்றுப் பொருட்கள் இதுவரை மனித எலும்பு கூடுகளோடு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் இதுவரை 39 தினங்கள் அகழ்வு பணி நடைபெற்றுள்ளது.இதன்போது குறித்த 72 சான்றுப் பொருட்களும் எடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு பாதுகாப்பாக நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது எனவும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
![]()