சிக்கப் போகும் முக்கிய அரசியல்வாதிகள்; கைதான பாதாள குழு தலைவர்கள் வெளியிடும் தகவல்கள்

தமது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக கடந்த காலங்களில் அரசியல்வாதிகளால் பாதாள குழுக்கள் உள்ளிட்ட குற்றக்கும்பல்கள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது கைதாகியுள்ள பாதாள குழு முக்கியஸ்தர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் கைது செய்யபட்ட பாதாள குழு முக்கியஸ்தர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்த போது கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நீண்ட காலமாக பிரபல குற்றக்கும்பலாக செயற்பட்ட கெகல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்து உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை வந்ததும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக திட்டமிட்டு பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதானி உள்ளிட்ட குழுவினர் 7 நாட்களாக இந்தோனேசிய பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டு அவர்களை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இவ்வாறான திட்டமிட்ட குற்றக் கும்பல்கள் நாட்டில் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனேயே வளர்ந்து வந்துள்ளன. தமது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக இந்த திட்டமிட்ட குற்றக்கும்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் ஊடாக பல்வேறு நன்மைகளையும் பெற்றுள்ளனர். அதேபோன்று அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக அவர்களின் சொத்துக்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் தெரியவந்துள்ளது. இதன்படி இந்த விடயங்கள் தொடர்பில் ஆழமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த பாதாள குழுக்கள் மக்களுக்கு பாதிப்பை எற்படுத்தக்கூடிய வகையில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. நாங்கள் கடந்த 10 மாதங்களாக இந்த குழுக்கள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து திட்டங்களை வகுத்து வந்தோம். அந்த திட்டங்கள் தற்போது ஒவ்வொன்றாக செயற்படுத்தி வருகின்றோம். இதன்படி இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்மூலம் மேலும் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய மற்றையவர்களையும் கைது செய்ய முடியுமாக இருக்கும் என்றார்.
![]()