ரணில் சஜித் இணைவு வெற்றி?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றை இணைக்கும் முயற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதாகிய போது அவரின் விடுதலைக்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இதுபோன்று எதிர்காலத்தில் ஒன்றாகவே பயணிக்க இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு இரு கட்சிகளின் முக்கியஸ்தர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 6ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி இந்த மாநாட்டுக்கான அழைப்பை ஏற்று சஜித் பிரேமதாச அதில் கலந்துகொள்ள வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவரும் தமது கட்சி உறுப்பினர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், கடந்த காலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இருதரப்பும் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான தடைகள் கிடையாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் சந்திக்க செய்து இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு இரு தரப்பிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அது சாத்தியப்படவில்லை. எனினும் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட பின்னர் அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அடிக்கடி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வைத்தியசாலைக்கு சென்று ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட்டு வந்தார்.
இதன்படி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருவரையும் இணங்கச் செய்து எதிர்காலத்தில் ஒன்றாக பயணிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இருதரப்பிலும் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகதெரிவிக்கப்படுகின்றது.
![]()