முறைப்பாட்டாளர் சமாதானமாக விரும்பியபோதும் லான்சாவை விளக்கமறியலில்வைக்க உத்தரவிட்ட நீதிபதி

2006 ஆண்டு இடம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்ஸா மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பந்துள நாவடுன்ன ஆகியோரை செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி ரகித்த அபேசிங்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
2006. 03.08ஆம் திகதி கொச்சிக்கடை பிரதேசத்தில் சுனில் சில்வா என்பவரின் வீட்டை உடைத்து, தீயிட்டுக் கொளுத்தி, உடை மைகளை சேதப்படுத்தி, பணம் நகைகளை கொள்ளையடித்து, வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 19 சந்தேக நபர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்கு ஒன்று உள்ளது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 28ஆம் திகதி வியாழக்கிழமை நீர்கொழும்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நிமல் லான்ஸா மற்றும் பந்துள நாவட்டுன்ன ஆகிய இருவரையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்ஸா, முன்னாள் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பந்துள நாவடுன்ன இருவரும் கொச்சிக்கடை பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் அளித்தனர்.
பொலிஸ் நிலையத்தில் வைத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் ரகித்த அபேசிங்க முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய பொலிஸார் கொச்சிக்கடை, ஜோஸப் மைக்கல் மாவத்தையில் சுனில் சில்வா என்பவரின் வீட்டை உடைத்து தீயிட்டுக் கொளுத்தி, உடமைகளை சேதப்படுத்தி, பணம் நகைகளை கொள்ளையடித்து, வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக முறைப்பாட்டாளர் சுனில் சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் துப்பாக்கியை வைத்த இருந்ததாகவும் வாகனத்தை நோக்கி சுட்டதாகவும் சாட்சியாளர்கள் மூவர் சாட்சியம் அளித்துள்ளதாக மன்றில் தெரிவித்தனர். அதனால் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.
சந்தேக நபர்கள் சார்பாக சட்டதரணிகளான இந்திக்க சில்வா, தந்த நிரன்ஜன், எம்.பீ.எம். மாஹிர்,நாலக திஸாநாயக்கவுடன் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி சாந்த நிரியெல்ல வாதிடுகையில் எமது சேவைபெறுனர் இருவரும் சம்பவம் நடக்கும் நேரத்தில் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் இருந்ததாக பொலிஸ் அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஆயுதமும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கவில்லை சம்பவம் நடந்து 19 வருடங்களாகியும் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 19 வருடங்களாக வழக்கு இடம்பெற்றாலும் இவர்களுக்கு அழைப்பாணை விடுக்கவில்லை. ஏன் இந்த அவசரம்? ஏற்கனவே 19 சந்தேக நபர்களும் பிணையில் உள்ளனர். எனவே இவர்களுக்கும் பிணை வழங்குமாறு கோரினார்.
முறைப்பாட்டாளர் சுனில் சில்வா சார்பாக ஆஜரான சட்டத்தரணி சரித்த ஜயநாத் மன்றில் தெரிவிக்கையில் முறைப்பாட்டாளர் தற்போது அவுஸ்ரேலியாவில் உள்ளார். சம்பவம் நடக்கும் போது இரு சாராரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தபோதும் பின்னர் ஒரே கட்சியில் இனைந்தார்கள். அவர் தூதரகம் ஊடாக எனக்கு கடிதம் அனுப்பி இந்த வழக்கை சமாதானமாக முடித்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் என்றார்.
நீதவான் ரகித்த அபேசிங்க தீர்ப்பை வழங்கும் போது 19 வருடங்களாக நடக்கும் வழக்கிற்கு தற்போது சமாதானம் என்பதை நீதிமன்றுக்கு ஏற்கமுடியாது. துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதனால் சுடுகலன் சட்டத்தின் 26 இலக்கத்திற்கு இணங்க தண்டனை வழங்க கூடிய குற்றம் ஒன்று இடம் பெற்றுள்ளதனால் பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி செப்டம்பர் 12ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் அவசரமாக விசாரணை நடத்தி அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் அபேவர்தன, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, மாநகர உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
![]()