இலங்கை

தம்பிலுவில் மயானத்தில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

கருணா-பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில்,  (28) மாலை அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் தெசீபா ரஜீபன் முன்னிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.

கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்டம், காரைதீவு பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், கைவிலங்கிடப்பட்டு குறித்த பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இவர், திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி, படுகொலை செய்து, குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி, குற்றப்புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இந்த அகழ்வுப் பணியின் போது, குறித்த பிரதேசம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, பயங்கரவாத புலனாய்வு பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மற்றும் தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பிரசன்னமாக இருந்தனர்.

ஏற்கனவே கடந்த ஜூலை 31 ஆம் திகதி, தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி, படுகொலை செய்து, குறித்த பொது மயானத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறிய அனோசியஸ் சுரேஸ்கண்ணா (யூட் என அழைக்கப்படுபவர்) எனும் சந்தேக நபர், அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் மேற்பார்வையில், கைவிலங்கிடப்பட்டு குறித்த பொது மயானத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

எனினும், அவரது வாக்குமூலத்திற்கமைய, திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எவையும் கிடைக்காததால் அந்தப் பணிகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

பின்னர், மற்றொரு சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்று தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *