தமிழ் தேசிய கட்சிகள் ”செம்மணி’க்காக ஒன்றிணைந்திருப்பது நல்ல ”திருப்பம்”

செம்மணி விவகாரத்தில் முதல்முறையாக தமிழ் தேசிய பரப்பில் உள்ள சகல கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்து போராட்டத்தை செய்வது ஒரு நல்ல திருப்பமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பிலேயேஇவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், .
இன்று வரை தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் செம்மணி மனித புதைகுழியில் பாடசாலைக்குச் சென்ற குழந்தைகளுக்கு அப்பால் ஒரு தாய் தனது குழந்தையை அணைத்தவாறு இருக்கக்கூடிய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கூட மீட்கப்பட்டன.இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது அல்ல மாறாக இளைஞர்கள்,யுவதிகள் குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி இராணுவம் இவர்களை திட்டமிட்ட வகையில் கைது செய்து கொலை செய்து புதைத்திருக்கிறது என்ற விடயங்கள் தெளிவாக தெரிகின்றன .
இதற்கு முன்னர் முல்லைத்தீவில் இப்படியான இடங்கள் தோண்டப்பட்டன . மன்னாரில் இவ்வாறான இடங்கள் தோண்டப்பட்டன . இது நடந்த காலத்தில் இவை பற்றி அடுத்த கட்ட நகர்வுகள் எதுவும் செய்யப்படவில்லை. இதைப் பற்றி சரியான நீதித்துறை, நீதி சம்பந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றவொரு விடயம் இருக்கின்றது.
இந்த விவகாரத்துக்கு என்ன நடந்தது என்று கேட்டால் யாருமே பதில் சொல்ல கூடிய நிலையில் இல்லை.
இப்பொழுது நடைபெற்றிருக்கக்கூடிய இந்த செம்மணி புதைகுழி விவகாரம் என்பது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். அது நிச்சயமாக இலங்கை அரசாங்கத்தால் இலங்கை என்ற நாட்டில் இருக்கக்கூடியவர்களால் அந்த விசாரணையை செய்ய முடியாது.
முப்படைகளுக்கு எதிரான எந்த வித விசாரணைகளையும் அவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள். ஆகவே இந்த விஷயங்கள் விசாரிக்கப்பட வேண்டுமாக இருந்தால் ஒரு சர்வதேச நீதி பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அந்த நீதி பொறிமுறையை உருவாக்குவதில் உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். அந்த நீதி பொறிமுறையை உருவாக்குவதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முழுமையான ஆளுமையை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாகத்தான் இந்த நாட்டில் ஆரம்பத்திலிருந்து ஒரு திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய ஒரு இனப்படுகொலை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஒரு விடயம் மிக தெளிவாக தெரிய வரும்.
அரைகுறையாக விசாரித்து விடாமல் இதை விசாரிப்பதற்கான சரியான தொழில்நுட்ப உதவிகள், இதை பாதுகாப்பதற்கான வசதிகள், அடுத்த கட்டத்தை விசாரணை நோக்கி கொண்டு போவதற்கான உதவிகள் போன்ற பல விடயங்கள் சர்வதேச சமூகத்திடமிருந்து எங்களுக்கு நிச்சயமாக தேவை. அவர்களுடைய பங்களிப்புகள் என்பது முக்கியமானவை
இவற்றை கொண்டு நடத்துவதற்கான தொழில்நுட்பங்கள் என்பது முக்கியமானவை . நாங்கள் நிச்சயமாக இந்த சர்வதேச சமூகத்திடம் முக்கியமாக அந்த நிலையில் அவற்றை உறுதி செய்யும் முகமாக இயன்றவரை வடக்கு,கிழக்கில் உள்ள எல்லா மக்களிடமிருந்தும் முக்கியமாக பல்வேறுபட்ட உள்ளூர் ஆட்சி சபைகளில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் இருக்கக்கூடிய தமிழ் மக்களினுடைய கோரிக்கை இதுவாகத்தான் இருக்கிறது.
ஒரு சர்வதேச நீதி விசாரணை என்பது தேவை என்பதை வலியுறுத்தி சொல்ல வேண்டிய ஒரு அவசியம் ஏற்பட்டிருக்கிறது
இதற்கு முன்பு ஐ.நா. சபைக்கு பல்வேறுபட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன . நாங்கள் இந்த விடயத்தை முன்வைக்க விரும்புகின்றோம். அந்த அடிப்படையில் தான் ஒரு கையெழுத்து போராட்டம் ஒன்றை வட,கிழக்கில் செய்ய வேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானித்தது. அதற்காக தமிழரசுக் கட்சியுடன் பேசினோம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடும் நாங்கள் பேசினோம். ஆகவே அந்த வகையில் எங்களுக்கு அந்த ஆதரவை தெரிவித்து நாங்கள் எல்லோரும் இணைந்து இந்த விஷயத்தை செய்ய வேண்டும்.
இந்த கையெழுத்து போராட்டத்தை அடுத்த ஒரு கிழமை 10 நாட்களுக்குள் நாங்கள் செய்து இதனை முன்னெடுத்துச் செல்ல விரும்பகின்றோம். வருகிற 29ஆம் திகதி முதல் கட்டமாக வடக்கு மாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் இந்த கையெழுத்து சேகரிப்பை ஆரம்பிக்க இருக்கின்றோம்.அடுத்த கட்டமாக கிழக்கு மாகாணத்திலும் இந்த விடயங்களை நாங்கள் செய்யவுள்ளோம்.
முதல்முறையாக தமிழ் தேசிய பரப்பில் உள்ள சகல கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த விடயத்தை செய்வது நல்ல தொரு திருப்பமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
![]()