ரணிலுக்கு ஆதரவாக இன்று கொழும்பில் அணிதிரளும் எதிரணிகளின் ஆதரவாளர்கள்; நீதிமன்றம் வரை பேரணியாகச் செல்லவும் திட்டம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அவருக்கு ஆதவாக எதிர்க்கட்சிகள் பெருமளவானோரை கொழும்புக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவாளர்களும் மற்றும் அரசியல் கட்சிகளின் இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோரும் இவ்வாறு கொழுப்பில் அணிதிரள திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது பாரியாரான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் வெள்ளிக்கிழமை கைதாகிய ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவின் கைதை கடுமையாக கண்டித்துள்ள எதிர்க்கட்சிகள், அவரின் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளன. இதன்படி கடந்த தினங்களில் ஒன்று கூடி இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன.
இதன் ஒரு நடவடிக்கையாக இன்று கொழும்பில் பெருமளவான ஆதரவாளர்கள் ஒன்றுகூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் கொம்பனித்தெரு பகுதியில் அணி திரண்டு, நீதிமன்றம் வரையில் பேரணியாக செல்லலாம் என்றும் கூறப்படுகின்றது.
இதனால் இன்றைய தினத்தில் கொழும்பில் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாக பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
![]()