துப்பாக்கியால் முடியாததை அதிகாரத்தால் முடிக்கும் ஜே.வி.பி.; நாமல் குற்றச் சாட்டு

89/89 காலத்தில் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை, இப்போது அரச அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு கொண்டு செல்ல ஜே .வி.பி.முயற்சிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டினார்
பேருவளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய நாமல் ராஜபக்ச மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கத்திடம் கொள்கைத் திட்டங்களோ முறையான வேலைத்திட்டங்களோ கிடையாது. தான் கூறிய பொய்களை மூடி மறைப்பதற்காக இன்னும் நூற்றுக்கணக்கான பொய்களை அரசாங்கம் கூறுகின்றது. அதேபோன்று தமது இயலாமை தொடர்பில் மக்கள் புரிந்துகொள்ளும் போது தமது தவறுகளை முடி மறைப்பதற்காக ஒடுக்குமுறைகளை ஆரம்பிக்கின்றது.
தற்போது நாட்டின் முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்துள்ளது. அரசியல் பழிவாங்கல்களின் வேதனைகளை நாங்கள் அறிவோம். நாட்டில் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் மகிந்த ராஜபக்சவுமே அதிகளவில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது அவர் என்ன காரணத்திற்காக கைதாகினார் என்று எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
பிணைமுறி குற்றச்சாட்டிலா , பட்டலந்த சம்பவம் தொடர்பிலா கைது செய்யப்பட்டார் என்று தெரியாமல் இருந்தோம். ஆனால் அவ்விடத்திற்கு சென்ற போதே அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அரச தலைவராக நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி நிகழ்வுவொன்றுக்கு சென்றமை தொடர்பிலேயே கைதாகியுள்ளார் என்பதனை அறிந்தோம்.
அன்று 89/89 காலத்தில் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை, அன்று விடுதலைப் புலிகளால் யுத்தத்தின் மூலம் செய்ய முடியாது போனதை ஜே.வி.பியினர் இப்போது அரச அதிகாரத்தை கொண்டு சர்வாதிகார ஆட்சிக்கு நாட்டுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். மற்றைய பக்கத்தில் விடுதலைப் புலி டயஸ்போராக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் நடக்கின்றனர்.
அரச தலைவராக இருந்தவருக்கு இதுதான் நிலைமையென்றால் இனி எந்த அரச தலைவர்களும் பயமின்றி தீர்மானங்களை எடுக்க மாட்டார்கள். அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகளையும், இயலாமையையும் மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு முன்னாள் ஜனாதிபதியை கைது செய்வதற்கு அரசாங்கம் சிஐடியை பயன்படுத்தியுள்ளது என்றார்.
![]()