ரணிலின் கைதுக்கு ஆதரவாக பேசுகிறாரா சுமந்திரன்? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் ம.அ.சுமந்திரன் தெரிவித்த கருத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது கவலையைத் தெரிவித்தார். “சுமந்திரன் யாழ்ப்பாணத்திலிருந்து பேசுகிறாரா அல்லது ரணிலின் இல்லத்திலிருந்து பேசுகிறாரா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, கறுப்பு ஜூலை கலவரங்கள், யாழ்ப்பாண நூலகம் எரிப்பு மற்றும் பல்வேறு படுகொலைகள் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். அத்தகைய ஒருவருக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிடுவது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் இணைந்து, தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்த தனிநபர்கள் இப்போது நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர், இதன் மூலம் நீதி அனைவருக்கும் சமமாகப் பிரயோகிக்கப்படும் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
![]()