இலங்கை

400 வரை எலும்புக் கூடுகள்; இரு வழக்கையும் இணைக்க வேண்டும்

பழைய செம்மணி வழக்கும் புதிய செம்மணி வழக்கையும் இணைக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

செம்மணி மனித புதைகுழி வழக்கு தொடர்பான விசாரணை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற போதே சுமந்திரனால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் வழக்கு நிறைவுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், சோமரத்ன ராஜபக்ஷ என்கிற மரண தண்டனை கைதி மேல் நீதிமன்றத்திலே தெரிவித்த கூற்றின் அடிப்படையில் தான் 1999ம் ஆண்டு செம்மணி அகழ்வு நடத்தப்பட்டது. ஆனால் 15 எலும்பு கூடுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. அவருடைய கூற்றிலே 300 தொடக்கம் 400 வரையான எலும்பு கூடுகள் புதைக்கப்பட்டதாக சொல்லி இருக்கிறார்.

இப்பொழுது ஏற்கனவே 150 எலும்புக்கூடுகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்படுகிற காரணத்தினாலும் அவர் காண்பித்த இடத்திற்கு மிக அருகாமையில் இந்த மனிதப் புதைகுழி இருக்கிற காரணத்தாலும் இதையே சோமரத்ன ராஜபக்ஷ சொல்லியிருக்க வேண்டும்.

26 வருடங்களுக்குப் பிறகு இது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் கூட இவர் முன்னரே அதிக உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறிய விடயம் நிரூபணம் ஆகிறது என்ற அடிப்படையில், அந்த விடயத்தோடு இந்த விடயம் தொடர்புபட்டது என்பது கண்கூடாக தெரிகிறது என்ற சமர்ப்பணத்தை செய்தேன்.

பி 2899 வழக்கு யாழ் நீதவான் நீதிமன்றத்திலே ஆரம்பிக்கப்பட்டு பல ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிலர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விடுவிக்கப்பட்டு ஐந்து பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வழக்கு அவர்களுடைய பாதுகாப்பு நிமித்தமாக முதலிலே அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு இடமாற்றப்பட்டு தற்பொழுது கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலேயே இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

பி 2899 என்ற யாழ் நீதிமன்ற வழக்கு எட்டில் இருந்து அனுப்பப்பட்ட அந்த வழக்கை மீளவும் இந்த நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு ஒரு கோரிக்கையை நீதவான் செய்ய வேண்டும் என கேட்டு இருந்தேன்.

அவர் அந்த விடயத்தில் இவ்வாறு இரண்டு தொடர்புபட்டதா என்பதை பரிசீலித்து தொடர்புபட்டதாயின் அதற்கான நடவடிக்கையையும் எடுக்குமாறு பணித்திருந்தார்- என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *