குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் உண்மைகளை கூறுவதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாரில்லை

சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்ற சோமரத்ன ராஜபக்ஷவின் அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் எனவும், ஏனெனில் கடந்தகாலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி மற்றும் சகோதரி கேசரியிடம் தெரிவித்தனர்.
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் என்பன தொடர்பில் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டுமொரு சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சர் உள்ளிட்டோருக்கு அண்மையில் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயத்தில் சோமரத்ன ராஜபக்ஷவின் நிலைப்பாடு தொடர்பில் அவரது மனைவி செனாலி சம்பா விஜேவிக்ரம மற்றும் அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஷ ஆகியோர் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெளிவுபடுத்தினர்.
அதன்படி பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியை கைதுசெய்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தனது கணவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது மிகப்பாரதூரமான குற்றச்சாட்டு எனவும், அக்குற்றத்தைப் புரியாத தனது கணவர் 29 வருடகாலமாகத் தண்டனை அனுபவித்துவருதாகவும் அவரது மனைவி செனாலி சம்பா விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று தாம் நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக்கொடுப்பதாகத் தற்போது பலர் குற்றஞ்சாட்டுகின்ற போதிலும், தாம் நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை எனவும், மாறாக தனது கணவருக்கும், அவருடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏனைய நால்வருக்குமான நீதியையே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இவ்விடயத்தில் நாட்டுக்குள் தமக்கான நீதி கிடைக்காவிடின், தாம் சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியைக் கோரவிருப்பதாகவும், உள்நாட்டு அரசாங்கம் தமக்கு எவ்வித நிவாரணத்தையும் அளிக்காத நிலையில், தனது சகோதரர் சர்வதேச விசாரணையில் சகல விடயங்கள் தொடர்பிலும் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ரோஹினி ராஜபக்ஷ தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி சோமரத்ன ராஜபக்ஷவின் அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் என்றும், ஏனெனில் கடந்தகாலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி விளக்கமளித்தார்.
மேலும் தனது கணவர் மீதும், ஏனைய நால்வர் மீதும் சுமத்தப்பட்ட மிகமோசமான குற்றத்தை உண்மையிலேயே புரிந்தவர்கள் வெளியே சுதந்திரமாக இருப்பதாகவும், அக்குற்றத்தைப் புரியாதவர்கள் 29 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட செனாலி சம்பா விஜேவிக்ரம, தற்போது தனது கணவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கையையும், தமக்கான நீதியையுமே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
![]()