அடையாளங்காணல் செயன்முறையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அச்சம்.!

செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்தல், அடையாளம் காண்பிப்பதற்கு வருகைதரும் பொதுமக்களை வழிநடத்தல், தகவல்களைப் பெறல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினராலேயே முன்னெடுக்கப்படும் என்பதனால், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் அங்கு செல்வதற்கு அஞ்சுவதாகவும், மேலும் பலர் தாம் செல்லப்போவதில்லை என அறிவித்திருப்பதாகவும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்களைப் பொதுமக்களுக்குக் காண்பித்து, அதன்மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப்பிரிவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை (5) பி.ப 1.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்குறிப்பிட்டவாறு உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பன செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் காட்சிப்படுத்தப்படவிருப்பதாகவும், அவற்றைப் பார்வையிட்டு அதிலுள்ள பொருட்களை அடையாளம் காணும் பட்சத்தில், அதுகுறித்து நீதிமன்றத்துக்கு அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணைகளுக்கு அவசியமான ஒத்துழைப்பினை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இருப்பினும் மேற்குறிப்பிட்டவாறு பொருட்களைக் காட்சிப்படுத்தல், அடையாளம் காண்பிப்பதற்கு வருகைதரும் பொதுமக்களை வழிநடத்தல், தகவல்களைப் பெறல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினராலேயே முன்னெடுக்கப்படும் என்பதனால், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் அங்கு செல்வதற்கு அஞ்சுவதாகவும், மேலும் பலர் தாம் செல்லப்போவதில்லை என அறிவித்திருப்பதாகவும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு மனிதப் புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காணும் செயன்முறை உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், மாறாக பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது அவர்கள் அச்சமுறும் வகையிலோ மேற்கொள்ளப்படக்கூடாது எனவும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
![]()