பா.ஜ.கவின் வாக்கு மோசடி – ஆதாரத்தை வௌியிடவுள்ள ராகுல் காந்தி

போலி வாக்காளர்கள் மூலம் மோசடி செய்து மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ராகுல் காந்தி, தெரிவித்துள்ளார்.
இது தேசத் துரோகம் என்றும் பாஜகவுக்கு ஆதரவாக யார் இதில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை ஒருபோதும் விடப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிப்பதுடன், மகாராஷ்டிரத்தை போன்று பிகாரிலும் வாக்கு திருட்டுக்கு பாஜக முற்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இதனிடையே, இதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என இந்திய தேர்தல் ஆணையம் மறுத்திருந்தது.
இந்த நிலையில், டில்லியில் நடைபெறும் காங்கிரஸின் வருடாந்த சட்ட மாநாட்டில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, வாக்கு திருட்டுக்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவிக்கையில் ”தேர்தல் முறையைப் பற்றி நான் சமீப காலமாகப் பேசி வருகிறேன்.
2014 முதலே தேர்தல் முறையில் ஏதோ தவறு இருப்பதாக எனக்கு சந்தேகம் இருந்து வந்தது.
குஜராத் பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதில் எனக்கு சந்தேகம் இருந்தது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது ஆச்சரியமாக இருந்தது.
நாங்கள் இதைப் பற்றி பேசும்போதெல்லாம் மக்கள் ஆதாரங்கள் எங்கே என்று கேட்டார்கள்?
பின்னர் மகாராஷ்டிர மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், 4 மாதங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நாங்கள் படுதோல்வி அடைந்தோம்.
3 வலிமையான கட்சிகள் திடீரென மறைந்துவிட்டது.
தேர்தல் முறைகேடுகளை பற்றி தீவிரமாக ஆராய்ந்தோம். மகாராஷ்டிரத்தில் அதனை கண்டுபிடித்தோம்.
இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம்.
சில நாள்களில் மக்களவைத் தேர்தலை பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிடுவோம்.
6.5 இலட்சம் வாக்காளர்களில் 1.5 இலட்சம் பேர் போலியானவர்கள்.
உண்மை என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார் மோடி.
15 இடங்கள் மோசடி செய்யப்படாமல் இருந்திருந்தால், அவர் இந்தியாவின் பிரதமராக இருந்திருக்க மாட்டார் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
![]()