செம்மணி படுகொலைகள்,மனிதப் புதைகுழிகளுக்கு சந்திரிகாவும் கதிர்காமருமே பொறுப்புக் கூற வேண்டும்

செம்மணி படுகொலைகள் நடந்ததாக நம்பப்படும் 1995 முதல் 2001 ஆம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்த ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அவரது அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமருக்கும் இப்படுகொலையில் பங்கிருப்பது வெளிப்படையாக தெரிகிறது எனத் தெரிவித்திருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையுடன், சர்வதேச தரத்தில் ஒரு விசாரணை நடைபெற்றால் மாத்திரமே சமாதான தேவதையாக தன்னை உலகுக்கு காட்டிக்கொண்டு ஆட்சி செய்த சந்திரிக்கா, தமிழ் மக்களை எந்தளவுக்கு இன அழிப்பு செய்தார் என்ற கறைபடிந்த வரலாறு வெளியுலகுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருக்கும் அதேவேளை, உறவுகளை தொலைத்துவிட்டு நீதிக்காக நீண்டகாலமாக காத்திருக்கும் பல ஆயிரம் உறவுகள் மத்தியில் இந்த விடயம் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவமாக உருவெடுத்திருக்கும் நிலையில், செம்மணி விடயத்தில் நீதியான விசாரணை நடைபெறவேண்டுமென்ற குரல்கள் தமிழர் தாயகம் தாண்டி சர்வதேச அளவில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தினக்குரலுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2001 ஆம் ஆண்டுக்கிடையில்தான் செம்மணி படுகொலைகள் அதிகமாக நடந்திருப்பதாகவும் இன்று அந்தப்பகுதியில் கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடுகளுக்கும் அந்த காலப்பகுதியில் (1995-2001) நடந்த படுகொலைகளுக்கும் தொடர்பிருப்பதாக அநேகமான ஆய்வாளர்களும் தமிழ் மக்களும் நம்புகிறார்கள். ஆகவே அந்த காலப்பகுதியில் இந்த நாட்டை ஆட்சி செய்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் அவருடன் இணைந்து இந்த நாடு (இலங்கை) சிறந்த நாடாக இருப்பதாக உலகமெங்கும் சென்று பிரசாரம் செய்துகொண்டிருந்த அன்றைய வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கும் செம்மணி படுகொலையில் பங்கிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
ஆகவே, சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையுடன், சர்வதேச தரத்தில் செம்மணி புதைகுழியை ஆய்வு செய்தால் மாத்திரமே சமாதான தேவதையாக தன்னை உலகுக்கு காட்டிக்கொண்டு ஆட்சி செய்த சந்திரிக்கா, தமிழ் மக்களை எந்தளவுக்கு இன அழிப்பு செய்தார் என்ற விடயத்தை வெளியில் கொண்டுவர முடியும்.
கிருஷாந்தியும் அவரது உறவினர்களும் அரியாலை சித்துப்பாத்தி மயான வளாகத்துக்குள் புதைக்கப்படவில்லை. இவர்களது உடல்கள் மயானத்துக்கு வெளியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில்தான் அரையும் குறையுமாக தோண்டியெடுக்கப்பட்டன. அப்படியென்றால் செம்மணி பிரதேசம் முழுவதும் மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கிறது என்று நம்புவதற்கு ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக தற்சமயம் சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இராணுவத்தினரின் காவலரண்கள் -முகாம்கள் இருந்திருக்கின்றன. அதேபோல்,அரியாலை சித்துப்பாத்தி மயானத்துக்கு முன்னால் இராணுவ காவலரண் மற்றும் மயானத்துக்கு உள்ளே மிகப்பெரிய இராணுவ முகாம் இருந்திருக்கிறது.
ஆகவே, குறித்த பிரதேசத்தை சுற்றிவர இராணுவ முகாம்கள்-காவலரண்கள் இருந்த நிலையில்,குறித்த பிரதேசத்தில் நிலத்திலிருந்து அரையடி ஆழத்தில் கூட மனித உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு புதைக்கப்பட்ட மனித உடல்கள் அலங்கோலமாக-கோர்வைகளாக -ஒரே இடத்தில் மூன்று – நான்கு பேரது உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், குறித்த உடல்கள் எந்த துணிகளும் இல்லாமல் ,எந்தவொரு அணிகலன்களும் இல்லாமல் புதைக்கப்பட்டிருக்கின்றன.
ஆகவே செம்மணி பிரதேசத்தில் தற்சமயம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எலும்புக்கூடுகள் அனைத்தும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவை என நம்புவதற்கான அனைத்து சாட்சிகளும் வெளிக்கிளம்பி வருகின்றன. ஆகவே இந்த செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் அவருடைய ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் போன்றோருக்கு இருக்கின்ற பங்கு தொடர்பிலும் விசாரிக்கப்படவேண்டும். ஒரு வெளிப்படையான விசாரணை நடைபெற்றால் மாத்திரமே அவர்களது (சந்திரிகா) சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டு ஒரு நியாயமான நீதியை செம்மணி விடயத்தில் பெறமுடியும்.
![]()