இலங்கை

செம்மணி புதைகுழியில் நீதிக்கான தேடலில் புதிய திருப்பங்கள்: கண்டெடுப்புகளும், நல்லடக்கச் சான்றுகளும்!

யாழ்ப்பாணம், ஜூலை 26, 2025: யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள், ஆறாத காயங்களை மீண்டும் கிளறி, நீதிக்கான தேடலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. (வெள்ளிக்கிழமை), இரண்டாம் கட்ட அகழ்வின் 20வது நாளில், மேலும் 2 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தினால் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டு மனிதப் புதைகுழிகளிலும் அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டப் பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினத்துடன் இரண்டாம் பகுதி அகழ்வுப் பணிகள் 20வது நாளாகத் தொடர்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் 25 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 16 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இதுவரை கட்டம் கட்டமாக 29 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் அகழ்ந்தெடுக்கப்பட்ட 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 81 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 90 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அகழ்வுப் பணிகளில் ஒரு முக்கியத் திருப்பமாக, கடந்த சில தினங்களில் அடையாளம் காணப்பட்ட சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள், முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டதற்கான சான்றுகளைக் கொண்டுள்ளன. அவை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை, எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட முறைமை, மற்றும் சடலங்கள் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தமை போன்ற சான்றுகளின் அடிப்படையில், அவை முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, அந்தப் பகுதிகள் மீண்டும் மண் போட்டு மூடப்பட்டுள்ளன.

யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களின் நேரடி கண்காணிப்பில், தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோம தேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் மற்றும் தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் இந்த உணர்வுபூர்வமான அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மனிதப் புதைகுழிகள் காணப்படலாம் எனச் சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, அவ்விடங்களில் துப்பரவுப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. செம்மணியின் மௌனம் உடைக்கப்பட்டு, கடந்த காலத்தின் கொடூரமான உண்மைகளும், அத்துடன் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டதற்கான சான்றுகளும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *