இலங்கை

புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சி; 16 தமிழ் இளைஞர்கள் நீதிமன்றால் விடுதலை

தடை செய்யப்பட்டிருக்கும் பயங்கரவாத இயக்கமொன்றினை( விடுதலைப் புலிகள்) மீள்கட்டியெழுப்பும் நோக்கத்துடன் அவ்வமைப்பினை விருத்திசெய்தல், ஊக்கப்படுத்துதல், ஒத்துழைப்பு வழங்குதல், குறித்த குற்றங்களைப் புரிவதற்கு உடந்தையளித்ததுடன், ஒரு பொது நோக்கத்துடன்

செயலாற்றுவதற்கும், அதற்கான குற்றத்தைப் புரிய சூழ்ச்சி செய்ததன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பதினாறு தமிழ் இளைஞர்களுக்கு எதிரான வழக்கில் மேற்கூறிய அனைவரும் கொழும்பு நீதிமன்றினால் வியாழக்கிழமை எல்லாக் குற்றச்சாட்டுகளினின்றும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

பார்த்தீபன், தூயவன், சார்ல்ஸ், சுயந்தன், மனோகரன், உதயசிவம், வசந்தன், ஈழவேந்தன், உமாசுதன், இன்பராஜ், யுவன், சுதாகரன், சீலன், அழகசிங்கம், இந்திரராஜா, சர்மா ஆகியவர்களே குற்றம் சாட்டப்பட்டவர்களாவர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பூநகரி, அக்கராயன்குளம், முகமாலை, சாவகச்சேரி, தச்சன்தோப்பு, செட்டியார்தரைவேலி,யாழ்ப்பாணம், சுண்டிக்குழி, முட்கொம்பன், மட்டக்களப்பு, பருத்தித்துறை, வல்லிப்புரம் ஆகிய இடங்களில் ,இதுவரை கைதுசெய்யப்படாமலிருக்கும் இலக்கியன் மாஸ்ரன், சுடர் ஆகியோருடன் கூட்டாக சதி செய்ததாகஇவர்கள் மீது கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேற்கூறிய 28 குற்றச்சாட்டுகளுடன் மேலதிகமாக, குறித்த குற்றங்களைப் புரிவதற்காக, பயங்கரவாதத்திற்கு பணம் வழங்கும் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.

மேற்கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொருட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களால் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள், இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகள் மற்றும் சட்ட வைத்திய அறிக்கைகள் ஆகிய ஆவணங்களுடன் 58 சாட்சிகளையும் வழக்கு தொடுனர் சார்பில் சட்ட மா அதிபர் மேற்கூறிய குற்றப் பத்திரத்தினை 2022ம் ஆண்டு தாக்கல் செய்திருந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 2020 மார்ச் , ஏப்ரல் மாதங்களில் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.

மேற்குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னராக, குற்றச்சாட்டுப் பத்திரத்திற்கு எதிராக சட்ட ரீதியான பூர்வாங்க ஆட்சேபணைகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டன.

குற்றப் பத்திரிகையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு அப்பாற்பட்டது எனவும் குறித்தக் குற்றச்சாட்டுக்கள் யாவையுமே வடக்கு மாகாணம் அல்லது கிழக்கு மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள மேல் நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசியலமைப்பின் பிரமாணங்களுக்கு அமைவாகவும் மாகாண நீதிமன்றங்கள் விசேட சரத்துக்களின் கீழும் நியாயாதிக்க அதிகாரம் கொழும்பு நீதிமன்றத்திற்கு இருக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது. இதற்கு மேலதிகமாக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் 27ம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டிருக்கும் ஒழுங்குவிதிகள் வெற்றும் வெறி தானவையும் ஆகும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, இலங்கைக் குற்றவியல் நடைமுறைக் கோவையின் 16ம் அத்தியாயத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள விதிமுறைகள் பிரகாரம் குற்றச்சாட்டுகள் அமையவில்லை என்ற கருத்தும் சட்டத்தரணிகளால் நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்து அதன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூலமான கருத்துக்களையும் கருத்தில் கொண்ட நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பதினாறு பேரையும் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளில் திருப்தியடைந்து, விசாரணையை தொடங்காமலேயே குற்றஞ்சாட்டப்பட்ட பதினாறு தமிழ் இளைஞர்களையும் விடுதலை செய்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் கே.எஸ். இரத்தினவேல், ரனித்தா ஞானராஜா, சுரங்க பண்டார,சுவாதிக்கா ரவிச்சந்திரன், கேதினி பாக்கியராசா மற்றும் வொஷின் ஹேரத் ஆகியவர்கள் மன்றில் பிரதிநிதித்துவம் செய்தார்கள்.

வழக்கு தொடுனர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி உதார கருணாதிலக்க, அரச சட்டத்தரணி சுஜித் பண்டார ஆகியவர்கள் தோன்றினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *