மாகாணசபைகளை பலவீனமாக்க சதி; சாணக்கியன் எம்.பி.தெரிவிப்பு

மாவட்டங்களிலுள்ள எல்லா வைத்தியசாலைகளும் மத்திய அரசுக்குள் செல்ல வேண்டும் என்று கூறுவதன் ஊ டாக மாகாணசபையும் ஒரு பலவீனமான கட்டமைப்பாக எதிர்காலத்தில் மாறக்கூடிய அபாய நிலையுள்ளதாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கடந்த வாரம் சுகாதார அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கடந்த காலத்தின் தான் பணிபுரிந்த வைத்தியசாலைகளை பார்வையிட்டிருந்தார். அவர் மாவட்ட எம்.பி.க்களையும் அழைத்து பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இனிமேல் வரும்போது இதனை கவனத்தில் எடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாங்கள் வாழைச்சேனை . மட்டக்களப்பு நகர், களுவாஞ்சிக்குடிக்கு என 3 ஒசுசல மருந்தகங்களை கேட்டிருந்தோம். இந்த 3 இடங்களிலுமுள்ள வைத்தியசாலைகளும் பாரிய மக்கள் தொகைக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகள் .இதனடிப்படையில்தான் 2018,2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒசுசல நிறுவனம் நேரடியாக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு விஜயம் செய்து நிரந்தர கட்டிடம் இருந்தால் ஒசுசல அமைக்கலாம் எனக் கூறினார்கள் .இதற்கமையை கட்டிடம் அமைக்கப்பட்டபோதும் அது தற்போது மூடப்பட்டநிலையில் உள்ளது.
எனவே மட்டக்களப்பு நகரில் முதலாவதாக ஒசுசல அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில் அதேநேரம் இந்த களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலும் அமைக்க வேண்டும்.
எமது மாவட்டத்தை பொறுத்தவரை 3,4 வகை வைத்தியசாலைகள் உள்ளன. எனினும் இந்த வைத்தியசாலைகளுக்கு போதிய வளங்கள் கிடைக்காத காரணத்தினால் எல்லா வைத்தியசாலைகளும் மத்திய அரசுக்குள் செல்ல வேண்டும் என்று கூறுவதன் ஊடாக மாகாண சபைகள் ஒரு பலவீனமான கட்டமைப்பாக எதிர்காலத்தில் மாறக்கூடிய அபாய நிலையுள்ளது.
இதேநேரம் மத்திய அரசின் கீழ் இருக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஏ டிபி வங்கியின் நிதியம் ஊடாக கட்லாப் ,எம். ஆர்.ஐ.,சி.ரி.ஸ்கானர் ஆகியவற்றிற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஏற்கனவே மட்டகள்ளப்பு மாவட்டத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட கட்லாப்பை களுத்துறை மாவட்டத்திற்கு அப்போதாகிய சுகாதார அமைச்சரின் செல்வாக்கை பயன்படுத்தி மாற்றினார்கள் . இது 2021இல் நடந்தது. தற்போது வழங்கவுள்ளதாக கூறப்படும் கட்லாப் ,எம்.ஆர்.ஐ.,சி.ரி.ஸ்கானர் ஆகியவற்றில் எம்.ஆர். ஐ.,சி.ரி.ஸ்கானர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அவசியமில்லை எனக்கூறி வெட்டப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம்.நீங்கள் உங்களின் அண்மையை மட்டக்களப்பு விஜயத்தின்போது எம்.ஆர்.ஐ.யை வழங்கும் உறுதிமொழியை வழங்கியிருந்தீர்கள்.
எனவே ஏ டிபி வங்கியின் நிதியம் ஊடாக மட்டக்களப்புக்கென ஒதுக்கப்பட்ட கட்லாப் ,எம். .ஆர்.ஐ. ,சி.ரி.ஸ்கானர் ஆகியவற்றை மட்டக்களப்புக்கு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை சுகாதார அமைச்சர் தரவேண்டும் என்றார்.
![]()