இலங்கை

மட்டு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு ஆகஸ்ட் 25 க்கு ஒத்திவைப்பு சட்டமா அதிபரை ஆஜராக உத்தரவு

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழி தோண்டப் டப்படவேண்டும் என்ற வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் அடுத்த தவணைக்கு சட்டமா அதிபரை ஆஜராகுமாறு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

கடந்த 12.071990 ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய காத்தான்குடியை சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் வைத்து கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்து 2014 ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இடம் பெற்று சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாக சந்தேகிக்கப்படும் இடத்தை தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கையிடுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 04.10.2020இல் சட்டமா அதிபரினால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கானது கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இப்பின்னணியிலேயே இவ்வழக்கின் முறைப்பாட்டாளர் அப்துல் மஜீத் அப்துர் ரவூப் என்பவரின் வேண்டுகோளுக்கு அமைவாக 11.07.2025ஆம் திகதியாகிய வெள்ளிக்கிழமை, குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணியால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் முன் நகர்த்தல் பத்திரத்தை சமர்ப்பித்து வழக்கு திறந்த மன்றில் மீள நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த தவணையான 25.08.2025ஆம் திகதி சட்டமா அதிபரை ஆஜராகுமாறு கட்டளையிட்ட நீதவான வழக்கை அந்தத் திகதிக்கு ஒத்திவைத்தார்.

குறித்த வழக்கை நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு நீதிமன்றில் எடுத்துக் கொண்டபோது சட்டமா அதிபரை பிரதி நிதித்துவப்படுத்தி எவரும் ஆஜராகாத நிலையில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இருந்து இரண்டு சட்டத்தரணிகள் ஆஜாராகி களுவாஞ்சிகுடி நீதிமன்றத்துக்கு காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஒரு விரிவான கடிதத்தினை ஏற்கனவே அனுப்பி இருந்ததாகவும் குருக்கள் மடம் மனித புதை குழி தோண்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் அதே நிலைப்பாட்டிலேயே தற்போதும் இருப்பதாகவும் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

இதன்போது நீதவான்,ஏற்கனவே திட்ட வரைபு ஒன்று சட்ட வைத்திய அதிகாரியினால் நீதி மன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது என்று சுட்டிக்காட்டிய அவர் அது 2020ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டதால் கால மாற்றத்தினால் அதை மீளாய்வு செய்து மீள அந்த திட்ட வரைவை நீதிமன்றத்துக்கு அடுத்த தவணையின் போது சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளையிட்டு அடுத்த தவணைக்கு சட்டமா அதிபரை ஆஜராகுமாறு கட்டளையிட்டு வழக்கை 25.08.2025ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *