இலங்கை

சம்பூரிலும் மனிதப் புதைகுழியா?; மிதிவெடி அகற்றத் தோண்டிய பகுதியில் மனித எச்சங்கள் !

மூதூர் – சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித மண்டை ஓடும் எலும்பு எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்தப் பணியை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறும், இந்தப் பகுதியை எதிர்வரும் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக மக் (MAG )எனப்படும் மிதிவெடி அகற்றும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு வெள்ளிக்கிழமை (18) முதல் மிதிவெடி அகற்றும் பணியை ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் இந்தப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிதைவடைந்த மனித மண்டை ஓடும் எலும்பு எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணி இடநிறுத்தப்பட்டு நீதிமன்ற உத்தவுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் அந்த இடத்தை பார்வையிட்டதோடு,மிதிவெடி அகற்றும் பணியை எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் அந்தப் பகுதியை நீதிபதியின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரை அந்தப் பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகழ்வுப் பணியின்போது சிதைவடைந்த மனித தலைப்பகுதி(மண்டையோடு)மற்றும் கால்களின் எலும்புப் பகுதிகளே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இருந்து சுமார் 40 மீற்றர் தூரத்தில் சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபி இருக்கின்றது. அத்துடன் சம்பூர் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றும் வரை இந்தப் பகுதியை அண்மித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *