இலங்கை

இந்தியாவின் கைப்பாவை அரசே இலங்கையில் உள்ளது; விமல் வீரவன்ச கடும் சாடல் 

இந்திய ஆதரவு கைப்பாவை அனுர திசாநாயக்கவின் ஆட்சியின் தலையீட்டின் மூலம் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் மின்னணு அடையாள அட்டையை நாட்டு மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிப்பு பணிகளை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதால் தனிப்பட்ட தகவல்கள் மூன்றாம் தரப்பிற்கு செல்லும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் அதனை பகிஷ்கரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதியாக முன்னர் இருந்த அநுர திஸாநாயக்க இப்போது ரணில் திஸாநாயக்கவாக மாறியுள்ளார். இல்லையென்றால் அநுர விக்கிரமசிங்க என்றும் கூறலாம். டிஜிடல் அடையாள அட்டை தயாரிப்பு பணிகளை இந்தியாவுக்கு வழங்கும் விடயத்தில் ஜனாதிபதியின் செயற்பாடு அப்படித்தான் இருக்கின்றது. அடையாள அட்டை திணைக்களம் டிஜிட்டல் அடையாள அட்டைக்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளது. இவ்வாறு இருக்கையிலேயே தற்போதைய அரசாங்கம் இந்திய நிறுவனத்திற்கு அந்த திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இது தொடர்பான டென்டரில் மூன்றரை வருடங்களுக்கு கட்டமைப்பின் நிர்வாகம் இந்திய நிறுவனத்திடம் இருக்கும் என்பதுடன், அதன் பின்னரே இலங்கை அடையாள அட்டை திணைக்களத்திற்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் பின் கதவால் வரவும் முடியும். அத்துடன் இதிலுள்ள தகவல்கள் மூன்றாம் தரப்பிடம் சென்றால் 10 வீத பொறுப்பே அந்த நிறுவனத்திற்கு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது கூறிய விடயங்கள் என்ன என்று பாருங்கள். அவர்கள் மனசாட்சியுடன் இப்போது பதிலளிக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்கள் மூன்றாம் தரப்பிற்கு என்னவாகும். இப்போது எதிர்க்கட்சிகள், மலையக கட்சிகள் அமைதியாக இருப்பது ஏன்? அவர்களிடம் பணம் வாங்குவதுதானே காரணம். எவ்வாறாயினும் எமது நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எமது தகவல்கள் வெளியில் செல்வதற்கு நான் விரும்பவில்லை. அடையாள அட்டை திணைக்களத்திற்கு வழங்குவதற்கே நான் இணங்குவேன். இதனை விடுத்து இந்திய நிறுவனத்திற்கு அதனை வழங்கக் கூடாது.

இந்திய ஆதரவு கைப்பாவை அனுர திசாநாயக்கவின் ஆட்சியின் தலையீட்டின் மூலம் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் மின்னணு அடையாள அட்டையை நாட்டு மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *