இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்; நீதிக்கான மய்யத்தின் தலைவர் சுட்டிக்காட்டு

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிக்கான மய்யத்தின் சாய்ந்தமருது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
இன்று இஸ்ரேலிய உல்லாசப் பயணிகளினால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இவை தேசிய பாதுகாப்புக்கு மிகவும் குந்தகம் விளைவிப்பவையாக அமைந்துள்ளன. ஆனால் இவற்றை எமது நாட்டு அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
இலங்கையில் சில இடங்களில் சபாத் ஹவூஸ் என்ற பெயரில் மதத்தை பரப்புவதற்கான நிலையங்கள் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் டெய்லி மிரர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி அறிக்கையில், மீரிகம பகுதியில் இஸ்ரேலிய உல்லாசப் பயணிகளினால் ஒரு உணவு உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு கோழி இறைச்சிகள் பொதி செய்யப்படுவதாகவும் இவ்வாறு அங்கு பொதி செய்யப்படும் கோழி இறைச்சி கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அந்த நிலையத்தை பொலிஸார் சுற்றிவளைத்து, சிலரை கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே டெய்லி மிரர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில், பொத்துவில் பகுதியில் இஸ்ரேலியர்களினால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நிலையம் ஒன்றில் போதைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும் அதனால் கிடைக்கும் வருமானங்கள் உண்டியல் முறையில் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எமது நாட்டின் சட்டங்களுக்கு முற்றிலும் முரணாண இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய பாரதூரமான விடயங்களாகும். எனினும் இந்த விடயத்தில் அரசாங்கம் ஒரு மெத்தன போக்கில் உள்ளதை காண முடிகின்றது.
இது ஒரு சமூகத்திற்கான பிரச்சினையில்லை. முஸ்லிம்களுக்கோ தமிழர்களுக்கோ எதிரான செயற்பாடுகளாக மாத்திரம் இவற்றை பார்க்க முடியாது. இஸ்ரேல் உல்லாசப் பயணிகளின் செயற்பாடுகள் ஒட்டுமொத்தமாக எமது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவையாகவே அமைந்திருக்கின்றன. எமது பிரதமர் கூட இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசாங்கம் பின்னிற்கிறது.
எனவேதான் இனியும் தாமதிக்காமல் இதன் பாரதூரத் தன்மையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒரு சிவில் சமூகம் என்ற அடிப்படையில் நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
![]()