கர்தினால் மீது பழி போட அரசு முயற்சி; நாமல் தெரிவிப்பு

சானி அபேசேகர , ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனம் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசாங்கம் முயற்சிக்கிறது. எனவே உண்மையை கத்தோலிக்க சபை வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஸ வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை வலியுறுத்திய நாமல் ராஜபக்ஸ எம்.பி. மேலும் கூறுகையில்,
அரச சேவையை வினைத்திறனாக்குவதாக கூறிக் கொண்டு அச்சேவையை அரசியல்மயப்படுத்தும் வகையில் அரசாங்கம் தற்போது செயற்படுகின்றது. அந்தவகையில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர்களாக இருந்த சானி அபேசேகர , ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனங்கள் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறிய விடயம் பாரதூரமானது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறிய விடயத்தின் மூலம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசாங்கம் முயற்சிக்கிறது.எனவே உண்மையை கத்தோலிக்க சபை வெளிப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதாக அரசாங்கம் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது. விசாரணைகள் உண்மையாக நடந்தால்தான் தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி கூறிய பொய்களுக்கு பதில் கிடைக்கும் என்றார்.
![]()